மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு பிளஸ் 1 தேர்ச்சி சதவீதம் சரிவு?
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதால், பிளஸ் 1 தேர்ச்சி சதவீதம் சரிந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த, 2018 முதல் பிளஸ் 1 பொதுத்தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. 2018 ம் ஆண்டு, 24 ஆயிரத்து, 903 பேர் தேர்வெழுதினர். 2019 ல், 23 ஆயிரத்து, 984 ஆக குறைந்தது. 2020 ம் ஆண்டு 25 ஆயிரத்து, 622 பேர் தேர்வெழுதினர். 2021ல் கொரோனா காரணமாக தேர்வு நடக்கவில்லை. 2022 ல், தேர்வெழுதும் மாணவர் எண்ணிக்கை, 26 ஆயிரத்து, 153 ஆக உயர்ந்தது. 2023 மற்றும் 2024ல் முறையே, 24 ஆயிரத்து, 232 மற்றும், 26 ஆயிரத்து, 164 ஆக எண்ணிக்கை உயர்ந்தது.நடப்பாண்டு இதுவரை இல்லாத வகையில், 12 ஆயிரத்து, 224 மாணவர், 14 ஆயிரத்து, 559 மாணவியர் என 26 ஆயிரத்து, 783 பேர் பிளஸ் 1 தேர்வை எதிர்கொண்டனர். இதில், 11 ஆயிரத்து, 267 மாணவர், 14 ஆயிரத்து, 074 மாணவியர் என, 25 ஆயிரத்து, 341 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்தாண்டு மாணவர், தேர்ச்சி சதவீதம், 93.10; இம்முறை, 0.93 சதவீதம் குறைந்து, 92.17. மாணவியர் தேர்ச்சி, 97.07 ல் இருந்து, 0.4 சதவீதம் குறைந்து, 96.67. ஒட்டு மொத்த சதவீதம் கடந்துமுறை, 95.23 இம்முறை, 0.61 சதவீதம் குறைந்து, 95.23.கடநத முறை, மூன்றாமிடம் பெற்ற திருப்பூர், இம்முறை ஐந்து இடங்கள் பின்தங்கி எட்டாமிடம் பெற்றுள்ளது.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து மேல்நிலைக்கு வரும் மாணவ, மாணவியருக்கு சீட் மறுக்க கூடாது என உத்தரவிடப்படுகிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வாக கருதினாலும், தேர்ச்சி பெறாதவர் நலன் கருதி, பிளஸ் 2 வுக்கு அனுப்பி வைக்கின்றனர். அடுத்தாண்டு பிளஸ் 2 தேர்வுடன், பிளஸ் 1 தேர்வை சேர்ந்து எழுதி, வெற்றி பெற்றால், மாணவர்/ மாணவி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்படுகிறது.இருந்த போதும், பிளஸ் 1 தேர்ச்சி பெறவில்லையென்றாலும், அதே வகுப்பில் தொடர வேண்டியதில்லை என்பதால், பிளஸ் 1 அட்மிஷன் ஒருபுறம் அதிகமாகிறது. இதனால், ஆண்டுக்காண்டு தேர்வெழுதுவோர் எண்ணிக்கை உயர்கிறது.திருப்பூர் மட்டுமின்றி பெரும்பாலான மாவட்டங்களில் இந்நிலை இருப்பதால், பொதுத்தேர்வு தேர்ச்சியில் தேர்ச்சி சதவீதம் எட்டுவதில் போட்டி நிலவுகிறது. ஆகையால் தான் 0.01 என்ற சதவீதத்தில் கூட தேர்ச்சி சதவீதத்தை கூடுதலாக எட்ட முடியாமல் பல மாவட்டங்கள் பின் தங்குகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.