| ADDED : மார் 18, 2024 11:02 PM
உடுமலை:உடுமலை, மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, தேரோடும் வீதிகளை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.உடுமலையில், சுற்றுப்பகுதி கிராம மக்கள் வழிபடும் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா, ஏப்., 9ம் தேதி துவங்குகிறது. அன்று நோன்பு சாட்டுதலுடன் துவங்கி, 16ம் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சி, 24ம்தேதி திருக்கல்யாணம் மற்றும் 25ம்தேதி தேரோட்டம் நடக்கிறது.வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆயிரக்கணக்கானோர் தேரோட்டத்தை பார்வையிட வருகின்றனர். தேரோட்டம் சிறப்பாக நடப்பதையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதியில் வளம் மேம்படும், மழைபொழிவு இருக்கும் என மக்களின் நம்பிக்கையாக உள்ளது.தேரோடும் வீதிகளில் முறையான பராமரிப்பும் அவசியமாக உள்ளது. குண்டும் குழியுமான ரோடுகளால் தேரோட்டத்தின் போது தாமதமாகவும், சில இடங்களில் சிக்கலாகவும் மாறுகிறது.நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், இந்த தேரோடும் வீதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.நடப்பாண்டில் திருவிழா துவங்குவதற்கு, குறுகிய நாட்கள் மட்டுமே இருப்பதால், சீரமைப்பு பணிகளை முறையாகவும், முழுமையாகவும் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.