கிளை நுாலகத்தில் போதிய இடவசதியில்லை: மக்கள் வேதனை
உடுமலை; இடவசதியின்றி பாதிக்கும் பெதப்பம்பட்டி கிளை நுாலகத்துக்கு, கூடுதல் கட்டடம் கட்டி, முழு நேர நுாலகமாக தரம் உயர்த்தும் கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கீழ், பெதப்பம்பட்டியில் கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது.குடிமங்கலம் ஒன்றியத்தில், நுாலக ஆணைக்குழுவின் கீழ் பெதப்பம்பட்டி, பூளவாடி ஆகிய இரு கிளை நுாலகங்கள் மட்டுமே செயல்படுகிறது.மேற்குப்பகுதியிலுள்ள, 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு பெதப்பம்பட்டி கிளை நுாலகம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.முக்கியத்துவம் வாய்ந்த இந்த நுாலக கட்டடத்தில், போதிய இடவசதியில்லை. இரு அறைகளில் குறிப்புதவி நுால்கள் அடுக்கப்பட்டுள்ளது.முன்பகுதியில், செய்தித்தாள் மற்றும் வார இதழ்கள் படிப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கும், 10 பேருக்கும் குறைவாக அமர முடியும். உள்பகுதியில், அதற்கும் வாய்ப்பில்லை.குறுகலாக போதிய இடவசதியில்லாமல் இருப்பதால், பெரும்பாலான மக்கள், நுாலகத்துக்கு செல்வதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற இளைஞர்கள், தங்களுக்கு தேவையான புத்தகங்கள் இல்லாதது மற்றும் அமர்ந்து படிக்க இடமில்லாததால், பாதிக்கின்றனர். மொத்தமாக நுாலகம் முழுவதும், 10 பேர் கூட அமர்ந்து படிக்க முடியாத சூழல் பெதப்பம்பட்டி கிளை நுாலகத்தில் உள்ளது.போதிய வசதியில்லாததால், பெரும்பாலான வாசகர்கள், பெதப்பம்பட்டியில் இருந்து உடுமலைக்கு சென்று அங்குள்ள நுாலகங்களை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பெரும்பாலான கிராம மக்களின் வாசிப்புக்கு ஆதாரமாக உள்ள, பெதப்பம்பட்டி கிளை நுாலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும்; அதிக புத்தகங்களை ஒதுக்கீடு செய்து நுாலகத்தை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு கண்டுகொள்ளவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.