தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யுங்க! தோட்டக்கலைத்துறை அழைப்பு
உடுமலை; இயற்கை மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில், தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து கொள்ள, குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், 14 ஆயிரம் ெஹக்டேருக்கும் அதிகமான பரப்பில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்வதால், பல்வேறு நன்மைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இது குறித்து வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் கூறியதாவது: தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழக அரசின் பங்களிப்புடன், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் வாயிலாக, 'தென்னை பயிர் காப்பீட்டு திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தின் நோக்கம்
காப்பீடு செய்வதால், இயற்கை மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, தென்னை விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பு கிடைக்கும்.மரங்கள் திடீரென இறப்பதால், வருவாய் இழப்பை சந்திக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குதல்; இயற்கை பேரிடரால் ஏற்படும் தாக்கத்தை குறைத்து, விவசாயிகளை மறு நடவுக்கு ஊக்குவித்து, தென்னை சாகுபடியை லாபகரமானதாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய அனைத்து தென்னை மரங்களுக்கும் காப்பீடு செய்யலாம். குறைந்தபட்சம், 5 மரங்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும்.குட்டை மற்றும் கலப்பின ரகம், 4 முதல் 60 வயது வரையும், நெட்டை ரகம் 7 முதல் 60 வயது வரையும் காப்பீடு செய்ய தகுதியான மரங்களாகும்.புயல், ஆலங்கட்டி மழை, சூறாவளி, கனமழை, வெள்ளம், பரவலான பூச்சி அல்லது நோய் பாதிப்பால், ஈடு செய்ய முடியாத பாதிப்புகள்; வனத்தீ, புதர் தீ மின்னல் உட்பட தற்செயலான தீ விபத்துகள், நிலநடுக்கம், நிலச்சரிவு மற்றும் சுனாமி, கடுமையான வறட்சியால் மொத்த இழப்பு ஏற்பட்டால், திட்டத்தின் கீழ் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும்.முன்மொழி படிவம், ஆதார் அடையாள அட்டை நகல், சிட்டா, அடங்கல், கள அளவீட்டு புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.காப்பீட்டுத்தொகை, விவசாயிகள் செலுத்த வேண்டிய பீரிமியம் உள்ளிட்ட விபரங்களுக்கு விவசாயிகள் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். அல்லது, பெதப்பம்பட்டி உள்வட்ட விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ராஜசேகர், 86755 56865; சங்கவி 81110 55320; குடிமங்கலம் உள்வட்ட விவசாயிகள், சரவணகுமார், 97891 97648, மதன் 97867 78651 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.கூடுதல் விபரங்களுக்கு சிவானந்தன் துணை தோட்டக்கலை அலுவலர் 99449 37010, மாவட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சிவக்குமாரை, 88922 22331 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.