விசாரணை அறிக்கை தயாரிப்பு தீவிரம்
திருப்பூர்: தாராபுரத்தில் ஐகோர்ட் வக்கீல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தற்போது வரை, 20 பேர் கைது செய்யப்பட்டு, எட்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய, ஒன்றரை மாதம் மட்டுமே உள்ளதால், துரிதமாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம், முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம், 41. மாற்றுத்திறனாளி. ஐகோர்ட் வக்கீல். இவருக்கும், இவரின் சித்தப்பா குடும்பத்தினருக்கு இடையே முன்விரோதம் இருந்தது. சமீபத்தில், தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே சித்தப்பா நடத்தி வரும் தேன்மலர் மெட்ரிக் பள்ளி முறையான அனுமதியின்றி, விதிமுறை மீறி கட்டடம் கட்டப்பட்டது தொடர்பான குற்றஞ்சாட்டில், கோர்ட் சம்பந்தப்பட்ட வகுப்பறைகளை இடிக்க உத்தரவிட்டது. இதற்காக, கடந்த ஜூலை 28 ம் தேதி அகற்றப்படும் இடத்தின் அளவீட்டை கண்காணிக்க நண்பர்கள், உறவினர் என, நான்கு பேருடன் முருகானந்தம் சென்றார். அப்போது, கூலிப்படையினர் வெட்டி கொன்றனர். இதுதொடர்பாக, சித்தப்பா தண்டபாணி, மகன் கார்த்திகேயன் உட்பட, 18 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வக்கீல் கொலை தொடர்பாக கார்த்திகேயனின் மாமியார் சேலத்தை சேர்ந்த ஹேமா, 43 மற்றும் மகன் முகில், 22 ஆகியோரை தாராபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இக்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். வழக்கு குறித்து முழுமையான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், டி.எஸ்.பி., தலைமையில் துரிதமாக விசாரணை நடக்கிறது. இதுவரை இவ்வழக்கில், 20 பேர் கைது செய்யப்பட்டு, எட்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: முன்விரோதம் தொடர்பாக நடந்த கொலையில் பள்ளி தாளாளர் உட்பட, தற்போது வரை, 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எட்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்கொலை குறித்து ஐ.ஜி., மேற்பார்வையில் டி.எஸ்.பி. விசாரணை செய்து, மூன்று மாதத்துக்குள் வழக்கு குறித்து அறிக்கை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட் அறிவுறுத்தியிருந்தது. இதன் காரணமாக, வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னமும், 1.5 மாதம் கால மட்டுமே உள்ளதால் வழக்கு தொடர்பான வேலை துரிதமாக நடக்கிறது. கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடக்கிறது. ஏற்கனவே தண்டபாணி உள்ளிட்ட சிலர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை முடிந்தது. அவரது மகனையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.