விதை நெல் உற்பத்தியில் முறைகேடு; தாராபுரம் பகுதி விவசாயிகள் புகார்
திருப்பூர்; தாராபுரத்தில் விதை நெல் உற்பத்தி நிறுவனங்களின் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என, விவசாயிகள், கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில், 44 விதை நெல் உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்நிறுவனங்கள், பதிவு செய்யாத வயல்களிலிருந்து, இனத்துாய்மை செய்யப்படாத விதைநெல் கொள்முதல் செய்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது தொடர்பாக, கலெக்டர் கிறிஸ்துராஜிடம், உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட செயலாளர் முத்துரத்தினம் அளித்த மனு விவரம்:தாராபுரத்திலுள்ள விதை நெல் உற்பத்தி நிறுவனங்கள், அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. பதிவு செய்யப்படாத வயல்களிலிருந்து, உணவுக்காக விளைவிக்கப்பட்ட நெல்லை, விதை நெல்லாக கொள்முதல் செய்கின்றன. நெல் இனத்துாய்மை, புறத்துாய்மை இல்லாமல், விதை பண்ணைக்கு தேர்வு செய்கின்றனர்.வளரும் பருவம், பூக்கும் பருவம், அறுவடை ஆகிய மூன்று நிலைகளில் விதை நெல்லை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். நெல் குவியலை பரிசோதித்து சான்று வழங்க வேண்டும்.வேளாண் அதிகாரிகள் ஒப்புக்கு சில வயல்களில் மட்டுமே கள ஆய்வு செய்கின்றனர். வேளாண் அலுவலர்களின் சான்று இல்லாமலேயே, விவசாயிகளிடமிருந்து விதை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.இந்த விதை நெல்லை பயன்படுத்தும்போது, நெல் வளர்ச்சி பாதிப்பு, உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை விவசாயிகள் எதிர்கொள்ள நேரிடுகிறது.தாராபுரத்தில் இயங்கும் அனைத்து விதை நெல் உற்பத்தி நிலையங்களிலும், கொள்முதல் பதிவேடு மற்றும் இருப்பு பதிவேட்டில் குறிப்பிட்டிருக்கும், நெல் மூட்டைகளை ஆய்வு செய்ய வேண்டும்.விதை நெல் உற்பத்தியில் முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.