உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம் ... நிரந்தரமானது நெரிசல்!: பொதுமக்கள் போராட்டத்தால் பணிகள் நிறுத்தம்

நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம் ... நிரந்தரமானது நெரிசல்!: பொதுமக்கள் போராட்டத்தால் பணிகள் நிறுத்தம்

உடுமலை: உடுமலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களுக்கு காரணமாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில், அரசு துறைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல், பாரபட்சம் காட்டியதால், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. உடுமலை நகரில் பிரதான ரோடுகளான, பழநி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, பைபாஸ் ரோடு, ராஜேந்திரா ரோடு, உழவர் சந்தை ரோடு, கல்பனா ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, வ.உ.சி., வீதி, ராமசாமி நகர் ரோடு, கொழுமம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், ரோட்டின் இரு புறமும் ஆக்கிரமிப்புகள் அபரிமிதமாக காணப்படுகிறது. அதோடு, வணிக நிறுவனங்கள், கடைகள், ரோட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதோடு, அங்கு வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளதோடு, அடிக்கடி விபத்துக்களும், உயிரிழப்பு சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் அலட்சியம் காட்டி வருகின்றனர். அரசுத்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதோடு, பெரும்பாலான ரோடுகள் குறுகலாக மாறி, அடையாளத்தை இழந்துள்ளன. நகரின் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும், விதி மீறி ரோட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். நகராட்சி கூட்டத்திலும், விதி மீறல் கட்டடங்கள் மீது நகரமைப்பு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில், அரசுத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு, பொதுமக்கள், விவசாயிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து, அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில், கடந்த மாதம் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பிரச்னை குறித்து பேசப்பட்டது. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், மூன்று முறை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தள்ளி வைக்கப்பட்டு, நேற்று காலை துவங்கியது. நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி அதிகாரிகள் இணைந்து, ரயில்வே மேம்பாலம் முதல், உழவர் சந்தை ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற துவங்கினர். உழவர் சந்தை ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் ரோட்டை ஆக்கிரமித்திருந்த கட்டுமானங்களை இடித்து அகற்றினர். தொடர்ந்து, ராஜேந்திரா ரோட்டிற்கு வந்த நிலையில், அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டி வருகின்றனர். ஒரு சில கடைகளின் ஆக்கிரமிப்புகளை கண்டும், காணாமல் செல்கின்றனர். நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடம் எதுவரை என அளவீடு செய்யாமல், விருப்பு,வெறுப்பு அடிப்படையில் செயல்படுவதா, என கூறி, கடை உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், அதிகாரிகள் பேச்சு நடத்தினர். '' ஒரு வாரத்தில் சர்வே துறையால் அளவீடு செய்து, அதற்கு பின் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது'' என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

நகர் முழுவதும் அகற்றணும்

நகர ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து புகார் வந்தால், சந்தை அமைந்துள்ள ராஜேந்திரா ரோடு, உழவர் சந்தை பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள், பஸ் ஸ்டாண்ட், பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, பைபாஸ் ரோடு, ஐஸ்வர்யா நகர் சந்திப்பு, தளி ரோடு, தாராபுரம் ரோடு, பொள்ளாச்சி ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும், பெரிய நிறுவனங்கள் மற்றும் கட்டடங்கள் வீதிமீறி, மழை நீர் வடிகால் மற்றும் ரோட்டை ஆக்கிரமித்து அமைந்துள்ளது குறித்து கண்டு கொள்வதில்லை.

எனவே, அனைத்து ரோடுகளிலும், பாரபட்சமின்றி முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்