பஸ் ஸ்டாண்டில் நடை மேம்பாலம் கட்டி பல வருஷமாச்சு! பயன்பாட்டுக்கு வராமல் பாழாகும் அவலம்
உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, தேசிய நெடுஞ்சாலையை மக்கள் பாதுகாப்பாக கடக்க, லிப்ட் வசதியுடன் கட்டப்பட்ட நடைமேம்பாலம் பல ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல், வீணாகி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமும், நகராட்சி நிர்வாகமும் பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டில், தெற்குப்பகுதியில் மட்டும், நான்கு நுழைவாயில்கள் அமைந்துள்ளன.பஸ் ஸ்டாண்டில் இருந்து, இந்த நுழைவாயில்கள் வழியாக வரும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையை கடக்க சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து குறித்த சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அதன் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில், பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.அப்போது ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள, தேசிய நெடுஞ்சாலையில், சில மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறிப்பாக, உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகில், லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் கட்ட 1.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டனர்.மேலும், பஸ் ஸ்டாண்ட் அருகே சிக்னல் இல்லாத ரவுண்டானா அமைக்கப்பட்டவுடன், மக்கள் பாதுகாப்பாக ரோட்டை கடக்க, சென்டர் மீடியன் அமைத்து, நடை மேம்பாலத்தில் ஏறி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வகையில், திட்ட பணிகள் நடந்தது.இப்பணிகளுக்காக, உடுமலை நகராட்சி நிர்வாகத்தின் ஆலோசனைகளும் பெறப்பட்டு, திட்ட மாறுதல் செய்யப்பட்டது.இவ்வாறு, நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வகையில், 'லிப்ட்' வசதியுடன் கட்டப்பட்ட நடை மேம்பாலம் பணிகள் நிறைவு பெற்று பல ஆண்டுகளாகியும், பயன்பாட்டுக்கு வரவில்லை.காட்சிப்பொருளாக மாறிய, மேம்பாலம் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது. பாலத்தின் இருபுறமும், படிக்கட்டுகள் அருகே ஆக்கிரமித்துள்ளனர்; மின்விளக்குகள் மாயமாகியுள்ளது.'லிப்ட்' பயன்பாட்டுக்கு வராமல், பழுதாகி விட்டது. இவ்வாறு, மக்களுக்காக கட்டப்பட்ட மேம்பாலம், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசுத்துறைகள் அலட்சியத்தால், பாழாகி வருகிறது.தற்போது, தேசிய நெடுஞ்சாலையை சென்டர் மீடியன் இடைவெளியில், அபாய முறையில் மக்கள் கடந்து செல்கின்றனர். இதனால், வாகன ஓட்டுநர்கள், மக்கள் என இரு தரப்பினருக்கும், பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.திருப்பூர் கலெக்டர் தலைமையில் செயல்படும் சாலை பாதுகாப்பு குழு வாயிலாக, நடை மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.சென்டர் மீடியன் இடைவெளியில் ரோட்டை கடக்கும் அவலத்துக்கு, முற்றுப்புள்ளி வைத்து போக்குவரத்து போலீசார் வாயிலாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இல்லாவிட்டால், அரசு நிதி முழுமையாக வீணடிக்கப்பட்டதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.