உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடவு துவங்கியதும் தொழிலாளர் தட்டுப்பாடு; அரசு திட்டத்தில் மாற்றம் தேவை

நடவு துவங்கியதும் தொழிலாளர் தட்டுப்பாடு; அரசு திட்டத்தில் மாற்றம் தேவை

உடுமலை ; நடவு மற்றும் அறுவடையின் போது, தொழிலாளர் தட்டுப்பாடு ஏற்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில், பி.ஏ.பி., பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனத்தின் வாயிலாக, பல லட்சம் ஏக்கரில், விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, ஆடிப்பட்டம் எனப்படும் சீசனில், தானியங்கள், காய்கறிகள் சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, முக்கிய சீசனில், தானியம் மற்றும் காய்கறி சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயக்கம் காட்டும் நிலை உள்ளது. இதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை முக்கிய காரணமாகியுள்ளது. நடவு, களையெடுத்தல், அறுவடை பணிக்கு குறித்த நேரத்தில், தொழிலாளர்கள் கிடைக்காததால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால், இத்தகைய சாகுபடிகளை கைவிடுகின்றனர். இதே போல், அமராவதி உள்ளிட்ட ஆயக்கட்டு விளைநிலங்களில், நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் அமைத்தல், கரும்பு கரணை நடவு பணிக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாயிகள் கூறியதாவது: தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், விவசாய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், நடைமுறையில், திட்ட செயலாக்கத்தில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. தற்போது, திட்ட தொழிலாளர்கள், நீர்நிலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சாகுபடியில், முக்கிய பணிகளான, கால்வாய் சீரமைப்பு, நடவு செய்தல், களையெடுத்தல், அறுவடை உட்பட பணிகளில், திட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதில்லை. எனவே, முக்கிய சீசனில், சாகுபடி பணிகளுக்கு தொழிலாளர்கள் வர மறுப்பதால், தட்டுப்பாடு அதிகரித்து, குறித்த நேரத்தில், பணிகளை மேற்கொள்ள முடியாமல், கடும் நஷ்டத்துக்கு ஆளாகி வருகிறோம். எனவே, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தை போல, ஊராட்சி நிர்வாகத்தில், பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, தொழிலாளர்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றனர். அதில், சாகுபடி சார்ந்த அனைத்து பணிகளிலும், திட்ட தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இது குறித்து, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை