தென்னை மரங்களில் பச்சையத்தை சுரண்டும் இலைப்புழு தாக்குதல்!: ஒட்டுண்ணிகளை பயன்படுத்த வழிகாட்டுதல்
உடுமலை: உடுமலை பகுதிகளில், தென்னை மரங்களை கருந்தலை புழு எனப்படும் பச்சையம் தின்னும் இலைப்புழு தாக்குதல் தென்படுவதால், மேலாண்மை முறை மற்றும் ஒட்டுண்ணி பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம், என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.இப்பகுதிகளில், ஏறத்தாழ, 1.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி உள்ள நிலையில், வறட்சி, வேர்வாடல் உள்ளிட்ட பல்வேறு நோய்களாலும், தேங்காய், கொப்பரைக்கு போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.இந்நிலையில், தற்போது கருந்தலைப்புழு தாக்குதல் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கருந்தலைப்புழுவானது, கடலோரப் பகுதிகளில் குறிப்பாக இந்தியா போன்ற தீபகற்ப நாடுகளில் அதிக சேதம் விளைவிப்பதாகவும், ஆண்டு முழுவதும் இவற்றின் தாக்குதல் இருந்தாலும், கோடை காலங்களில் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.தென்னையை தாக்கும் கருந்தலைப்புழு அல்லது பச்சையம் தின்னும் இலைப்புழு தாக்குதல், உடுமலை வட்டாரம், கண்ணமநாயக்கனுார் பகுதிகளில் தென்படுகிறது.இவற்றை கட்டுப்படுத்தும் மேலாண்மை முறைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் குறித்து, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலாமணி கூறியதாவது: அறிகுறிகள்
அனைத்து வயதுள்ள தென்னை மரங்களையும் கருந்தலைப்புழு தாக்குகின்றது. மரத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால், கொண்டையின் மேற்பகுதியில் உள்ள, 3-4 ஓலைகளைத்தவிர மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து போய்விடும். ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தை சுரண்டி இப்புழுக்கள் தின்பதால், அதிகமாக தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீர்ந்து போனது போல் காணப்படும். மேலாண்மை முறைகள்
இந்த புழு தாக்கிய ஓலைகளை உடனடியாக வெட்டி, அழித்து விட வேண்டும் 'பிரக்கானிட்' என்ற குடும்பத்தைச் சார்ந்த ஒட்டுண்ணிகளை, இலைகளின் அடிப்பாகத்தில் விடுவதால் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.இந்த ஒட்டுண்ணியின் முட்டையானது, ஒரு அட்டையில் நூறு என்ற அடிப்படையில் இருக்கும். ஒரு ஏக்கருக்கு, 21 அட்டைகள் வீதம் பயன்படுத்த வேண்டும். ஒரு அட்டையின் விலை, ரூ. 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒட்டுண்ணி அட்டையானது உடுமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், உரிய ஆவணங்களான, சிட்டா மற்றும் ஆதார் அட்டையை நகலுடன் அணுகி பெற்றுக்கொள்ளலாம்.ஒட்டுண்ணி தேவைப்படும் விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சித்தேஸ்வரன் 88836 10449 ; சிங்காரவேல், 95242 27052 ; ராஜமோகன் 95854 24502 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.