மேலும் செய்திகள்
மாவட்டம் முழுவதும் 10 கிளை நுாலகங்கள் திறப்பு
14-Apr-2025
உடுமலை : தமிழக அரசு கண்டுகொள்ளாததால், 10 ஆயிரத்துக்கும் அதிகமான அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலக கட்டடங்கள் முழுமையாக பாழாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வாசித்தல், பொதுஅறிவை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில், நுாலகங்கள் செயல்பட்டு வருகின்றன.அவ்வகையில், தமிழகத்தில், கடந்த, 2006ல், தி.மு.க., அரசு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 12,660 கிராம ஊராட்சிகளில், தலா, 3.25 லட்ச ரூபாய் செலவில், நுாலக கட்டடங்கள் கட்டப்பட்டன. சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகங்களின் வாயிலாக, பராமரிப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.நுாலகங்களுக்கு, 1,500 புத்தகங்களும், மாத சம்பளமாக, 750 ரூபாயில் தன்னார்வலர்கள் நுாலகர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இந்நுாலகங்களால், கிராமப்புற மக்கள் அதிகம் பயன்பெற்றனர்.அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யாதது, சம்பளம் வழங்காதது உள்ளிட்ட காரணங்களால், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்கள் படிப்படியாக மூடப்பட்டன.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த நுாலகங்களை, நுாலகத்துறையின் கீழ் இணைத்து, மாவட்ட நுாலக ஆணைக்குழுக்கள் வாயிலாக, பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை எழுந்தது.மாவட்ட நுாலகர்கள் வாயிலாக, கிராமங்களிலுள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்களின் நிலை குறித்த விபரங்களை சேகரிக்க அரசு உத்தரவிட்டது.இதனால், நுாலகங்கள், மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கீழ் சேர்க்கப்பட்டு, புதுப்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பத்தாயிரத்துக்கும் அதிகமான நுாலக கட்டடங்கள் இடிந்து பாழடைந்து வருகிறது.பல கோடி ரூபாய் செலவிட்டு, நகரங்களில் நுாலகங்களை அமைக்கும் தி.மு.க., அரசு, கிராமப்புற நுாலகங்களை கண்டுகொள்ளாதது வேதனையளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
14-Apr-2025