மனுவோ அறநிலையத்துறைக்கு சென்றதோ வேறொரு துறைக்கு
பல்லடம்; பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:கலெக்டர் அலுவலகத்தில் கடந்த பிப்., மாதம் நடந்த குறைதீர்க்கும் முகாமில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்ந்து நான் வழங்கிய மனுவுக்கு, சமூக பாதுகாப்பு திட்டத்தில் இருந்து பதில் கடிதம் வந்தது. அதில், அறநிலையத்துறைக்கு நான் வழங்கிய மனுவின் எண் குறிப்பிடப்பட்டு, 'மனு அறநிலையத்துறை சார்ந்தது என்பது தெரிய வருகிறது. எனவே, மனுவின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது' என, சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில், சப் கலெக்டர் பக்தவச்சலம், அறநிலையத்துறை இணை இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன் நகல் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.குறை தீர்ப்பு நாள் முகாமில் பெறப்படும் மனுக்கள், முறையாக, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு செல்வதில்லை. அவ்வாறு மனுக்கள் சென்றாலும், அவற்றின் மீது உரிய தீர்வு காணப்படுவதில்லை. மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அண்ணாதுரை கூறினார்.