உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயத்தில் இயற்கை மேலாண்மையால் அதிக பலன்! தோட்டக்கலைத்துறை அறிவுரை

விவசாயத்தில் இயற்கை மேலாண்மையால் அதிக பலன்! தோட்டக்கலைத்துறை அறிவுரை

உடுமலை; விவசாயிகள் அதிகளவில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிப்பதை குறைத்து, இயற்கை மேலாண்மை முறைகளை பயன்படுத்துமாறு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் சசிகலா கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள், ஒரு லட்சத்து, 2 ஆயிரத்து, 532 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பயிர்களில் அதிகளவு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் களைக்கொல்லிகள் பயன்படுத்துவதால், விளை பொருட்களின் தரம் பாதிப்பதோடு, மண் வளமும் பாதிக்கிறது. செயற்கை ஊக்கிகள், உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை முடிந்தளவு தவிர்த்து, பயிர் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக உரம் பயன்படுத்தினால், பயிர் பாதுகாப்பு மற்றும் மண்வளம் மேம்படும். நிலங்களில் ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடாமல், பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்யவும்.பூச்சி நோய் தாக்குதல் எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர் ரகங்களை தேர்வு செய்து நடுதல், சரியான இடைவெளியில் நடவு செய்தல், பருவத்திற்கேற்ற பயிர்களை சரியான நேரத்தில் நடவு செய்தல், உயர் விளைச்சல் கொண்ட ரகங்களை தேர்வு செய்தல் வாயிலாகவும் மகசூல் அதிகரித்து, கூடுதல் வருவாய் பெற முடியும். உர நிர்வாகம் நன்கு மக்கிய தொழு உரம், ஆட்டு எரு, மண்புழு உரம், பண்ணை கழிவு உரம், வேப்பம் புண்ணாக்கு, செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள் செடிகளுக்கு வழங்கினால், தேவையான பேரூட்ட, நுண்ணூட்ட சத்துக்கள் கிடைக்கும். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உள்ளிட்ட உயிர் உரங்களை பயன்படுத்தினால், மண்ணில் சத்துக்களை நிலை நிறுத்தி, ரசாயன உரங்களின் பயன்பாட்டை 20 சதவீதம் அளவுக்கு குறைக்கலாம். பஞ்சகாவ்யா, தசகாவ்யா போன்ற இயற்கை இடுபொருட்களை அளித்தால் பயிர்களின் வளர்ச்சி, மகசூல் அதிகரிக்கும். பசுந்தாள் உரங்களான, சணப்பை, தக்கை பூண்டு, கொளுஞ்சி,கொத்தவரை உள்ளிட்ட பயறு வகைகளை பயரிட்டு, பூக்கும் தருணத்தில் உழவு செய்வதால், மண்வளம் மேம்படுவதுடன், நீர்ப்பிடிப்பு அதிகரித்து, மண் அரிப்பு தடுக்கலாம். பூச்சி மேலாண்மை செண்டுமல்லி, சோளம், கடுகு, ஆமணக்கு போன்ற பூச்சிகள் விரும்பி உண்ணக்கூடிய கவர்ச்சி பயிர்களை வரப்பு ஓரங்களில் பயிரிட்டால், பிரதான பயிர்களில் பூச்சிகளின் தாக்குதலை தடுக்க முடியும். மஞ்சள் நிற ஒட்டும் பொறி, இனக்கவர்ச்சி பொறி போன்றவற்றை பயன்படுத்துவதன் வாயிலாக, சாறு உறிஞ்சும் தாய் பூச்சிகளை கவர்ந்து அழித்து, ரசாயன பூச்சி கொல்லி பயன்பாட்டினை பெருமளவு குறைக்க முடியும். வேப்பங்கொட்டைசாறு, வேப்ப எண்ணெய், வேம்பு, புங்கம், இலுப்பை போன்ற தாவர எண்ணெய்கள் பயன்படுத்தியும் பூச்சிகளை விரட்டலாம். நோய் மேலாண்மை வேப்பம்புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு மற்றும் புங்கம் புண்ணாக்கு மண்ணில் இடுவதால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வாடல் நோயை கட்டுப்படுத்தலாம். வேப்பங்கொட்டை சாறு, பூண்டு, மிளகாய் கரைசல், பஞ்சகாவ்யா போன்றவற்றை தெளித்து, இலை வழி நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.விவசாயிகள் இது போன்ற அங்கக மேலாண்மை முறைகளை கடைபிடித்து, பயிர் சாகுபடி செய்யும் போது, அதிக மகசூல் மட்டுமன்றி, மண் வளமும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் மானியத்தில் வழங்குவதோடு, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், பாரம்பரிய காய்கறி சாகுபடி ஊக்குவித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. விவசாயிகள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை