புதிய தொழில்முனைவோர் கடன்; சிபில் ஸ்கோர் தேவையில்லை; அமைச்சர் அறிவிப்பு: டீமா வரவேற்பு
திருப்பூர்; புதிய தொழில்முனைவோர் கடன் பெற, 'சிபில் ஸ்கோர்' அவசியமில்லை என்ற நிதி அமைச்சரின் அறிவிப்புக்கு, 'டீமா' சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கியில் கடன் பெற, 'சிபில் ஸ்கோர்' முக்கிய பங்கு வகிக்கிறது. தனிநபரின் கடன் தொடர்பான நிதி நம்பகத்தன்மையை மதிப்பிடும், மூன்று இலக்கு எண்ணாகும்; இது, 300 முதல், 900 வரை மதிப்பிடப்பிடுகிறது. 'சிபில் ஸ்கோர்', ஏற்கனவே பெற்ற கடனை திரும்ப செலுத்தியது உட்பட, பல்வேறு வழிமுறைகள் பின்பற்றி கணக்கிப்படுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துவங்குவோர், வங்கிக்கடன் பெற்று, தொழில் துவங்குகின்றனர். அதற்கு, 'சிபில் ஸ்கோர்' என்ற விதிமுறையை வங்கிகள் பின்பற்றி வருகின்றன. புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கும், 'சிபில் ஸ்கோர்' என்பது, கட்டாயமாக்கப்படுகிறது. இதனால், புதிதாக தொழில் துவங்குவோர், தங்களது தொழில் துவங்குவதில் சிரமம் ஏற்படுவதாக தொழில்துறையினர் கவலை அடைந்தனர். துவங்குவதற்கான கடனை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. கடந்த ஜூன் மாதம், 10 ம் தேதி, இதுதொடர்பாக, திருப்பூர் 'டீமா' சங்கம், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியான, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'முதல் முறையாக கடன் பெறுவோர், இதுவரை கடன் பெறாமல் இருப்பதால், 'சிபில் ஸ்கோர்' இருக்க வாய்ப்பில்லை. எனவே, முதன்முறையாக தொழிற்கடன் பெறுவோருக்கு, விண்ணப்பதாரரின் ஆவணங்கள், வருமான ஆதாரங்களை மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்; 'சிபில் ஸ்கோர்' தேவையில்லை,' என்று கூறப்பட்டுள்ளது.
வங்கிகள் பின்பற்ற வேண்டும்
தொழில்துறையினர், முதல் முறையாக தொழில் துவங்கும் போது, வங்கிகள், 'சிபில் ஸ்கோர்' சரிபார்க்கின்றன. இதனால், கடன் பெறுவதில் வாய்ப்பு குறைகிறது. வீட்டுக்கடன், வாகன கடன், நகைக்கடன் பெற்று, சில தவணை செலுத்த தவறியிருந்தாலும், அது, 'சிபில் ஸ்கோரில்' பாதிப்பை ஏற்படுத்தும். புதிய தொழில்முனைவோர் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும்; எனவே, அத்தகைய நிபந்தனையை தளர்த்த வேண்டுமென, அரசுக்கு கடிதம் அனுப்பினோம். அதன் எதிரொலியாக, மத்திய நிதி அமைச்சர், முதன் முறையாக தொழிற்கடன் பெறுவோருக்கு 'சிபில் ஸ்கோர்' தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இதனை வங்கிகள் முறையாக பின்பற்ற வேண்டும். - முத்துரத்தினம் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர்