உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய மினி பஸ்கள் வழித்தடத் தேர்வு குளறுபடி?

புதிய மினி பஸ்கள் வழித்தடத் தேர்வு குளறுபடி?

திருப்பூர்: திருப்பூரில், ஏற்கனவே அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் பழைய வழித்தடங்களையே, பஸ்கள் இயங்காத வழித்தடமாக குறிப்பிட்டு, புதிய மினி பஸ்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.அனைத்து நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள 14 வழித்தடங்கள் நீட்டிக்கப்பட்டும், 4 முற்றிலும் புதிய வழித்தடங்களுடனும் என 18 புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; அந்த வழித்தடங்களில், கடந்த 17ம் தேதி முதல் மினி பஸ் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

வழித்தட வரைபடங்கள் வழங்குவதற்கு மறுப்பு

மினி பஸ் உரிமையாளர் கிருஷ்ணசாமி என்பவர், கலெக்டரிடம் அளித்துள்ள புகார்:திருப்பூர் மாவட்டத்தில் புதிய வழித்தடங்கள் அறிவிப்பு வெளியிட்டபோது, வழித்தட வரைபடங்களும் கொடுக்கப்பட்டன. ஆனால், வழித்தடம் நீட்டிப்பு அறிவிப்பு வெளியிட்டபோது, வழித்தட வரைபடங்கள் வழங்க மறுக்கப்பட்டது.மினி பஸ் தடம் நீட்டிப்பு அனுமதிக்கு கொடுத்த வழித்தடம், ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த பழைய வழித்தட வரைபடம், புதிய கால அட்டவணை என எதை கேட்டாலும், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வழங்க மறுக்கின்றனர்.

பஸ் ஸ்டாண்ட்களையே சுற்றிச்சுற்றி வழித்தடம்

வழித்தடம் நீட்டிக்கப்பட்ட பல மினி பஸ்கள், மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழி, புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகிய மூன்று பஸ் ஸ்டாண்ட்களை கடந்து, வெளியே செல்லவில்லை. ஏற்கனவே பஸ்கள் இயங்கிக்கொண்டிருக்கும் மெயின் ரோடுகளையே, நீட்டிக்கப்பட்ட வழித்தடமாக சேர்த்துள்ளனர்.

பஸ், மினி பஸ்கள்இயங்கியது மறைப்பு

இந்திரா நகர் வாட்டர் டேங்க் முதல் பாண்டியன் நகர் பஸ் ஸ்டாப் வரை,பஸ் இயங்காத வழித்தடமாக குறிப்பிட்டு, நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் சேர்த்துள்ளனர். ஆனால், இதே வழித்தடத்தில் ஏற்கனவே இரண்டு மினி பஸ்கள் இயங்குகின்றன.கொங்கு மெயின் ரோடு, கருப்பராயன் கோவில் முதல் சின்னபொம்ம நாயக்கன்பாளையம் வழித்தடத்திலும், அரசு பஸ்கள் இயங்குவது மறைக்கப்பட்டுள்ளது.திருமுருகன்பூண்டி முதல் இ.எஸ்.ஐ., மருத்துவமனை வழித்தடத்தில், இரண்டு அரசு பஸ்கள் இயங்கும்நிலையில், பஸ் இயங்காத வழித்தடமாக குறிப்பிட்டு, நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் சேர்த்துள்ளனர்.பெரும்பாலும், ஏற்கனவே பஸ்கள் இயங்கும் வழித்தடங்களையே, பஸ் இயங்கவில்லை என குறிப்பிட்டு, நீட்டிக்கப்பட்ட வழித்தடமாக குறிப்பிட்டுள்ளனர்.கிராமப்பகுதிகளை நகர பகுதிகளுடன் இணைக்க வேண்டும்; பஸ் வசதி இல்லாத பகுதிகளுக்கு மினிபஸ் இயக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறாமல் போகிறது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.வழித்தடங்கள் மறு ஆய்வுசெய்யப்படுமா?''அரசு விதிகளை மீறியும், முதல்வரின் எண்ணத்துக்கு எதிராகவும், திருப்பூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள, நீட்டிக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களையும் மறு ஆய்வு செய்யவேண்டும். தவறாக வழங்கப்பட்ட நீட்டிப்பு வழித்தடங்களை ரத்து செய்ய வேண்டும். வெளிப்படை தன்மையுடன் நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களுக்கான, வழித்தட வரைபடத்தை வழங்கவேண்டும்'' என்று கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில், மினி பஸ் உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ