தர்பூசணி கடைகளில் அதிகாரி தொடர் ஆய்வு
திருப்பூர்: தர்பூசணி பழங்களில், சாயமேற்றி விற்பனை செய்வதால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் இதுதொடர்பான ஆய்வு நடந்து வருகிறது. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழக்கடைகளில், நேரடி ஆய்வு நடத்தினர். சிறிய அளவு பஞ்சை கொண்டு, தர்பூசணி பழத்தில் வைத்து, சாயமிடப்பட்டதா என்று பரிசோதனை செய்யப்பட்டது.தர்பூசணி பழத்துண்டுகளை, கண்ணாடி டம்ளரில் உள்ள தண்ணீரில் ஊற வைத்து சோதனை செய்யப்பட்டது. நேற்றைய ஆய்வில், நிறமேற்றிய பழங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. சில கடைகளில் அழுகிய தர்பூசணி பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. குறிப்பாக, 60 கிலோ அளவுள்ள அழுகிய பழங்களை பறிமுதல் செய்து, அந்தக்கடைக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதேபோல், மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் நடந்து வருவதாக, அலுவலர்கள் தெரிவித்தனர்.