உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்ந்த பல்லடம்

தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்ந்த பல்லடம்

பல்லடம்: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான அறிவிப்பில், நந்திபுரம்-, கூடுவாஞ்சேரி, பல்லடம் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய மூன்று முதல் நிலை நகராட்சிகள், தேர்வு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன.கோவை மாவட்டத்தின் கீழ் இருந்த பல்லடம், 1964ம் ஆண்டு, பேரூராட்சியாகவும், 2004ம் ஆண்டு, மூன்றாம் நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து, 2010ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின், கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் நகராட்சி, திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. கடந்த, 2011 மக்கள் தொகை அடிப்படையில், 42 ஆயிரம் இருந்த நிலையில், தற்போது, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.பல்லடம் நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும் என, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த, நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனடிப்படையில், தற்போது, பல்லடம் நகராட்சி, தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசிடமிருந்து, நகராட்சிக்கு கூடுதல் வருவாய், திட்டங்கள், சலுகைகள் கிடைக்கும் என்றும், இதை பயன்படுத்தி, நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்ய முடியும். மேலும், கூடுதல் அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் எண்ணிக்கை உயரும் வாய்ப்பு உள்ளதாகவும் நகராட்சியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி