தென்னீரா பானத்துக்கு காப்புரிமை
பல்லடம் உலகத் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தயாரித்து வரும், 'தென்னீரா' பானத்துக்கு காப்புரிமை மற்றும் கண்டுபிடிப்பாளர் சான்று கிடைத்துள்ளது. பல்லடத்தில் உள்ள உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், 'தென்னீரா' என்ற பெயரில், 'நீரா' பானத்தை தயாரித்து, தமிழகம் உட்பட, அமெரிக்கா, வளைகுடா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு, இந்திய அரசின் காப்புரிமையுடன், கண்டுபிடிப்பாளர் சான்றும் கிடைத்துள்ளது. இதன் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலிங் மற்றும் மத்திய தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் எங்கள் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1,200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். வைட்டமின் மற்றும் தாதுக்கள் அடங்கிய தென்னீரா பானத்துக்கு பலகட்ட சோதனைக்கு பின் மத்திய அரசின் அங்கீகாரம் பெறப்பட்டது. இந்திய அரசின் காப்புரிமையுடன், இந்த செயல்முறையை கண்டுபிடித்து நடைமுறைப்படுத்திய நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜ் பெயரில் கண்டுபிடிப்பாளர் சான்றும் கிடைத்துள்ளது. தர கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்றி வருவதால், 'எப்.எஸ்.எஸ்.சி., 22000' என்ற உலக தர சான்றும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, காப்புரிமை, கண்டுபிடிப்பாளர் சான்று மற்றும் உலகத் தரச் சான்று ஆகியவை ஒருசேர கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, பாலசுப்பிரமணியம் கூறினார். --- பாலசுப்பிரமணியம் - தென்னீரா பாக்கெட்கள். அரசு உதவ வேண்டும் நீரா பானத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என போராடி வருகிறோம். இதற்காக, மத்திய, மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து, இதை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுமாறு வலியுறுத்தி வருகிறோம். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும், தமிழகத்தின் தயாரிப்பை ஊக்கப்படுத்தவும், தென்னீரா பானத்தை முன்னெடுத்து செல்ல மத்திய - மாநில அரசுகள் உதவ வேண்டும். - பாலசுப்பிரமணியம், உலகத் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், பல்லடம்.