மேலும் செய்திகள்
'லட்சியத்தை பள்ளிப்பருவத்திலேயே முயலுங்கள்'
03-Aug-2025
திருப்பூர் : ''விடா முயற்சியும், கடின உழைப்பும், மருத்துவ கல்வியில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும்,'' என, கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசினார். கலெக்டர் அலுவலகத்தில், மாணவ, மாணவியரின் திறமையை வெளிப்படுத்தி, ஊக்குவிக்கும் வகையில், 'காபி வித் கலெக்டர்' என்ற சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அரசு பள்ளியில் படித்து, சிறப்பு இடஒதுக்கீட்டில், டாக்டர் படிப்பை துவக்கியுள்ள மாணவ, மாணவியருடன், கலெக்டர் மனிஷ் நாரணவரே நேற்று கலந்துரையாடினார். மாணவ, மாணவியரின் பெயர், பயின்ற பள்ளி, தற்போது பயிலும் மருத்துவக்கல்லுாரி, அவர்களின் தனித்திறமைகளை தனித்தனியே கேட்டறிந்தார். தொடர்ந்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். ஆங்கிலப்புலமை குறைவு கற்பதற்கு தடையல்ல கலெக்டர் பேசியதாவது: நான் மஹாராஷ்டிரா மாநிலம் என்பதால், எனது தாய்மொழியில் தான் பள்ளிக்கல்வியை படித்தேன். அதன் பின்னரே, ஆங்கிலம் பயின்றேன். அரசு பள்ளியில் பயின்ற உங்களுக்கு ஆங்கில புலமை குறைவாக இருக்கலாம்; அது ஒரு தடையல்ல. இனிமேல் ஆங்கிலத்தை நன்கு கற்றுக்கொள்ளலாம். கல்விக்கு எப்போதும் மொழி தடையாக இருக்காது. உங்கள் திறமை மீது நம்பிக்கை கொள்ளுங்கள் அரசு பள்ளிகளில் பயின்றவர்கள், டாக்டராக முடியுமா என்றெல்லாம் கவலை இருக்கக்கூடாது. உங்கள் திறமையை நம்பி படிக்க வேண்டும். மாணவ, மாணவியர் குழுவாக அமர்ந்து படித்து, திறன்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். படிக்கும் போதே, உடன் பயில்பவருக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் போது, கற்றல் திறன் வேகமாக வளர்கிறது. தமிழகத்தில் தான், அதிக மருத்துவக்கல்லுாரிகள், செவிலியர் கல்லுாரிகள் உள்ளன. நாட்டிலேயே இங்கு தான், டாக்டர் இடங்களும் அதிகம் கிடைக்கிறது. மருத்துவ படிப்பை பயில, இங்குள்ள உள்கட்டமைப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குழுவாக படித்தால் இரட்டிப்பு பலன் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போன்ற தேர்வுகள், நேர்முக தேர்வுகளில், உங்களது தனித்திறன் மற்றும் பழக்கவழக்கம் குறித்தும் கேட்பார்கள். உங்கள் கல்விக்காக, 'டிக் ஷனரி' வழங்கியிருக்கிறோம். மருத்துவ படிப்பில் இருக்கும் சொற்கள், லத்தீன், கிரேக்க மொழிகளில் இருந்து வந்தவை; அவற்றை புரிந்து படிக்க வேண்டும். மருத்துவ கல்வியை பொறுத்தவரை, விடா முயற்சியும், கடின உழைப்பும் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும். தனித்தனியே படிப்பதை காட்டிலும், மருத்துவ படிப்பை குழுவாக படிப்பது இரட்டிப்பு பலன் கொடுக்கும். ஒவ்வொரு மாணவரும், தனித்தனி தலைப்புகளில் படித்துவிட்டு, அதனை சக மாணவ, மாணவியருக்கு கற்றுத்தர வேண்டும். இப்டி செய்வதால், அனைத்து தலைப்பிலும் புலமை பெற முடியும். இவ்வாறு, கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து, உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர். ரோட்டரி அமைப்பு பங்களிப்புடன், மருத்துவ மாணவ, மாணவியருக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. --- அரசு பள்ளியில் படித்து, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியருடன், கலெக்டர் மனிஷ் நாரணவரே. ஒரு உதவி கேட்டால் நுாறு உதவி கிடைக்கும் திருப்பூர் தொழில்துறையினர், ரோட்டரி போன்ற பொதுநல அமைப்பினர் தாராளமாக உதவி செய்வார்கள். ஒரு உதவி கேட்டால், நுாறு உதவி செய்யவும் திருப்பூரில் ஆட்கள் உள்ளனர். அதனால், உங்கள் கல்வி தடைபடாது. நானும் ஒரு மருத்துவம் பயின்றவன் என்பதால் கூறுகிறேன், டாக்டராகவும் இந்த சமுதாயத்துக்கு சேவையாற்ற முடியும்; அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. - மனிஷ் நாரணவரே.
03-Aug-2025