ரூ.6.87 லட்சம் சுருட்டிய ஆசாமிக்கு போலீஸ் வலை
திருப்பூர்; திருப்பூர், பி.என். ரோட்டை சேர்ந்தவர் கிரண்பாபு, 35. இவருக்கு சில மாதம் முன்பு பேஸ்புக் பக்கத்தில், ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பேசிய நபர், தன்னை சுதர்சன் என அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து, கிரண்பாபுவிடம் பங்குசந்தையில் குறைந்த அளவில் பணம் முதலீடு செய்வதன் மூலம் அதிகப்படியான லாபம் சம்பாதிக்கலாம் என கூறி, ஒரு வாட்ஸ் அப் குழுவில் இணைத்து விட்டார். அந்த குழு மூலமாக முதலீடு செய்ய பிரத்யேகமாக கணக்குகளை துவக்கினார். பல்வேறு பரிவர்த்தனைகளாக, 6.87 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். அதற்கான லாபத்தை எடுக்க முயன்ற போது, அவரிடம் கூடுதல் பணம் கேட்டனர். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிரண்பாபு ஆன்லைன் மூலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.