குளம் அழகுபடுத்தும் பணி இழுபறி வீணாகும் கட்டமைப்புகள்
உடுமலை : உடுமலை வெஞ்சமடை குளம், அழகு படுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. விரைந்து பணியை முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.உடுமலை, பழநி ரோடு வெஞ்சமடை பகுதியில், பி.ஏ.பி., கால்வாய் அருகே, குளம் உள்ளது. இக்குளம் பராமரிப்பு இல்லாமல், கழிவு நீர் தேங்கியும், புதர் மண்டியும் காணப்பட்டது.இதனை, நகர்ப்புறங்களிலுள்ள நீர் நிலைகள் மீட்கும் திட்டத்தின் கீழ், நகராட்சி சார்பில், 35 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கும் பணி துவங்கியது.குளத்தை சுற்றிலும், கான்கிரீட் மற்றும் கருங்கற்கள் அடுக்கி கரை அமைத்தல், பூங்கா, நடை பாதை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு பணிகள் துவங்கின.ஆனால், பணியை முழுமையாக முடிக்காமல், பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் குளம் புதர் மண்டி, கட்டுமான பணிகள் சிதிலமடைந்தும் வருகிறது. எனவே, குளம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.