நெடுஞ்சாலையில் குழிகள்; காத்திருக்கும் அபாயம்
பல்லடம்: தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள குழிகளால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்லடம் வழியே செல்லும் ரோடு, பொள் ளாச்சி, உடுமலை வழியாக, கேரள மாநிலத்தை இணைக்கிறது. வாகன போக்குவரத்து நிறைந்த இந்த நெடுஞ்சாலையில், இரண்டு இடங்களில், குழாய் உடைப்பு ஏற்பட்டு, குழிகள் உருவாகியுள்ளன. இவற்றால் பெரும் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. வடுகபாளையம் அரசு பள்ளி எதிரில், குழாய் உடைப்பால் நெடுஞ்சாலையில் ஆழமான குழி உருவானது. மண் கொண்டு இந்த குழி மூடப்பட்ட நிலையில், இதனருகே மற்றொரு பள்ளம் உருவானது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதால், பள்ளம் பெரிதாகிவிட்டது. வாகன ஓட்டிகள் அடிக்கடி பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்து வந்த நிலையில், போலீசார், தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இருப்பினும், பள்ளம் இன்று வரை மூடப்படாமல் உள்ளது. பொள்ளாச்சி ரோடு வெங்கிட்டாபுரம் பகுதியிலும் பள்ளம் உருவானது. ரோட்டின் வளைவான பகுதியில் உருவாகியுள்ள இந்த பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. விளக்கு வெளிச்சமும் இல்லாததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். பெரும் விபத்து ஏற்படும் முன், பள்ளங்களை மூட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.