பிரதமர் கடனுதவி திட்டம் சாலையோர வியாபாரிக்கு அழைப்பு
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி அறிக்கை:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமர் சாலையோர வியாபாரிகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளது.இதில், 10 ஆயிரம், 20 ஆயிரம் மற்றம் 50 ஆயிரம் ரூபாய் என மூன்று வகையில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கடன் பெற விண்ணப்பித்த விண்ணப்பதாரர், அவர் குடும்பத்தினருக்கும் அதே திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு வழங்கவும், இதர திட்டங்களின் கீழ் பயன் பெறும் வகையிலும், அவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.இதற்கான முகாம் வரும், 29ம் தேதி வரை, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்களிலும் இம்முகாம் நடைபெறவுள்ளது. இதில் பதிவு செய்ய வருவோர், குடும்ப உறுப்பினர்கள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ, ரேஷன் கார்டு நகல் மற்றும் மொபைல் எண் விவரங்களுடன் வர வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.