உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்கள் மனுக்கள் குவிந்தன; தீர்வுகள் சிறக்குமா?

மக்கள் மனுக்கள் குவிந்தன; தீர்வுகள் சிறக்குமா?

திருப்பூர் : மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகராஜ் தலைமை வகித்தார்.

அணைக்கு தண்ணீர்

வட்டமலைக்கரை பகுதி விவசாயிகள்: வெள்ளகோவில் - நாகமநாயக்கன் பட்டி ஊராட்சி, உத்தமபாளையத்தில் வட்டமலைக்கரை ஓடை அணை வறண்டுள்ளது. விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் சரிந்துள்ளது.மக்களின் குடிநீர் தேவை, நிலத்தடி நீர்மட்டம், கால்நடைகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு பி.ஏ.பி., தொகுப்பிலிருந்து அணைக்கு தண்ணீர் வழங்கவேண்டும்.

மதுக்கடை கூடாது

மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிர மணியம் தலைமையில் இ.கம்யூ.,வினர்: திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே, ரங்கநாதபுரம், 2வது வீதியில் டாஸ்மாக் மதுக்கடை (கடை எண்: 1909) பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 'குடி'மகன் களின் அட்டகாசங்களால், குடியிருப்பு பகுதி பொதுமக்களும், இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு வந்துசெல்லும் நோயாளிகளும் தினந்தோறும் இன்னலுக்கு உள்ளாகின்றனர்.மதுக்கடையை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

இடத்தை அளங்க...

தண்ணீர்பந்தல்பாளையம் பொதுமக்கள்: அவிநாசி தாலுகா, போத்தம் பாளையம் ஊராட்சி, தண்ணீர் பந்தல்பாளையம் பகுதி மக்களாகிய எங்களுக்கு, கடந்த நவ., 30ம் தேதி, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அக்., மாதத்துக்குள் குடி அமரவில்லையெனில், மனை இடத்தை அரசு திரும்ப எடுத்துக்கொள்ளும் என்பதால், பட்டாவுக்குரிய மனை இடத்தை அளவீடு செய்து, கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டித்தரவேண்டும்.

சாலை மோசம்

மாநகராட்சி கவுன்சிலர் செல்வராஜ் (இ.கம்யூ.,): மாநகராட்சி 11வது வார்டு, தண்ணீர் பந்தல் காலனி முதல் வேலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வரையிலான ரோட்டில், காஸ் குழாய் பதித்துள்ளதால், ரோடு மோசமாக உள்ளது. மண் கொட்டி சமன்படுத்தவேண்டும்.

கல்வி கேள்விக்குறி

பெருமாநல்லுாரை சேர்ந்த சுப்பிரமணி: பால சமுத்திரத்தில் உள்ள தனியார் பள்ளி, பிரெஞ்ச் மொழி இருப்பதாக கூறி, எனது மகளை சேர்த்துக்கொண்டது. பின், பள்ளி நிர்வாகமோ, பிரெஞ்ச் மொழி பாடத்துக்கு வேறு டியூசன் செல்லவேண்டும் என கூறி, வருகை பதிவேட்டிலிருந்து மகள் பெயரை நீக்கிவிட்டனர். காலதாமதம் காரணமாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மகளின் கல்வியை கேள்விக்குறியாக்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.குண்டடம், சூரியநல்லுார் பகுதி மக்கள்: வாழ்வாதாரத்துக்காக வெளியூர் சென்றுள்ளதால் காலியாக உள்ள தங்கள் வசிப்பிடங்களை, வருவாய்த்துறையினர், வேறு நபர்களுக்கு வழங்க கூடாது; எங்களுக்கே வழங்கவேண்டும்காங்., இலக்கிய அணியினர்: பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டிலிருந்து அகற்றப்பட்ட காமராஜர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும்.உடுமலை தாலுகா, மானுப்பட்டி மக்கள்: கன மழையால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.பொதுமக்கள் மொத்தம் 317 மனுக்கள் அளித்தனர். மனுக்களை பரிசீலித்து உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுத்து, குறைகேட்பு கூட்டம் மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டியது துறை சார்ந்த அதிகாரி களின் பொறுப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ