கொண்டத்துக்காளியம்மன் கோவில் புனரமைப்பு
பெருமாநல்லூர் : பெருமாநல்லாரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது.பழங்கால கல் கட்டடத்தில் அமைந்துள்ளது. கோவிலை புதுப்பிக்க உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். உபய தாரர்கள் மற்றும் பக்தர்கள் பங்களிப்பில் கோவிலை புனரமைக்க அறநிலையத்துறை அனுமதி வழங்கியது.இதில், 3.60 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம், 6.34 கோடி ரூபாய் மதிப்பில் திருமாளிகை பத்தி மண்டபம், 2.42 கோடி ரூபாய் மதிப்பில் வசந்த மண்டபம் உள்ளிட்டவை உபயதாரர்கள் மூலம் அமைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோவில் புனரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மேயர் தினேஷ் குமார், கோவில் செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரர் ஆகியோர் தலைமையில் நேற்று மாலை கோவில் வளாகத்தில் நடந்தது.கோவில் முன்னாள் அறங்காவலர்கள், உபய தாரர்கள், பக்தர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது. வரும் 27ம் தேதி காலை கணபதி பூஜையை தொடர்ந்து 9:15 முதல் 10:15 மணிக்குள் கால்கோள் விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.திருப்பணிக்கு அறநிலையத்துறை சார்பில், 6 கோடியே, 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ராஜ கோபுரத்தை தொடர்ந்து, மண்டபம் உள்ளிட்ட அடுத்தடுத்து பணியை உபய தாரர்கள், பக்தர்கள் நன்கொடை மூலம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.