ரூ.10 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
உடுமலை; உடுமலை அருகே, அரசுக்குச்சொந்தமான, ரூ.10 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.உடுமலை அருகேயுள்ள பெரியகோட்டையில், அரசுக்கு சொந்தமான, 1.65 ஏக்கர் நிலம், கடந்த, 1995ம் ஆண்டு, வெங்கடேசன் என்பவருக்கு வழங்கப்பட்டது. கடந்த, 2004ல், அரசால், சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.இதனை எதிர்த்து, அவரது வாரிசுகள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை அடிப்படையில், நீதிமன்றம், உடுமலை வருவாய் கோட்டாட்சியர், 5 மாதத்திற்குள் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது.அதன் அடிப்படையில், உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நிலம், அரசின் வருங்கால பயன்பாட்டிற்கு அவசிய தேவை என கருதி, அதனை அரசு நிலமாக தொடர உத்தரவிட்டார். இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, ரூ.10 கோடி ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.