உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரை நோக்கி வரும் ரிலையன்ஸ், ஜோடியாக் நிறுவன ஆர்டர்கள்

திருப்பூரை நோக்கி வரும் ரிலையன்ஸ், ஜோடியாக் நிறுவன ஆர்டர்கள்

ஏற்றுமதி வர்த்தகத்தில், நம் நாட்டுக்கு போட்டியாக மாறியிருந்த வங்கதேசம், கடந்த 2017 முதல், உள்நாட்டு சந்தையிலும் போட்டியை உருவாக்கியது. ஜி.எஸ்.டி., அமலான பின், கட்டுப்பாடு தளர்ந்து படிப்படியாக வங்கதேச ஆடை இறக்குமதி அதிகரித்தது. முன்னணி 'பிராண்டட்' நிறுவனங்கள், வங்கதேசத்தில் இருந்து ஆடைகளை உற்பத்தி செய்து, நம் நாட்டில் விற்பனை செய்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில், 500 கோடி ரூபாயாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி, 5,200 கோடி ரூபாயை தாண்டியது. இதன் எதிரொலியாக, உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறின. இதற்கிடையே, வங்கதேசத்தில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு, நிலைமை தலைகீழாக மாறியது; இந்திய பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அந்நாட்டின் தரைவழி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் எதிரொலியாக, அந்நாட்டில் இருந்து ஆயத்த ஆடை இறக்குமதி குறைந்தது. முன்னணி 'பிராண்டட்' நிறுவனங்களும், வங்கதேசத்துடன் வர்த்தகம் செய்ய முடியாதென உணர்ந்து, உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுடன் கரம் கோர்த்தன. அதன்படி, திருப்பூரில் இயங்கும் முன்னணி நிறுவனங்களுக்கு, ரிலையன்ஸ், ஜோடியாக், விமார்ட் உள்ளிட்ட 'பிராண்டட்' நிறுவனங்களின் ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில், “உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி சீராக இயங்கி வருகிறது. பெரிய சவாலாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி கட்டுக்குள் வந்துவிட்டது. கடந்த நான்கு மாதங்களாக ஆடை இறக்குமதி குறைந்ததால், உள்நாட்டு சந்தைகளில் திருப்பூர் ஆடைகளின் தேவை அதிகரித்துள்ளது. வங்கதேசத்துக்கு ஆர்டர் கொடுத்து வந்த முன்னணி 'பிராண்டட்' நிறுவனங்கள், நேரடியாக மீண்டும் திருப்பூருக்கே ஆர்டர் கொடுக்க துவங்கியுள்ளன,” என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை