மீட்டர் பெட்டி இடமாற்றம்; மின் விபத்து அபாயம்
திருப்பூர்; ஊத்துக்குளி கோட்ட மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தில், குறைகேட்பு கூட்டம் நடந்தது. கோட்ட செயற் பொறியாளர் விஜயேஸ்வரன் தலைமை வகித்தார். ஊத்துக்குளி கோட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் பங்கேற்று, பிரச்னைகளை சுட்டிக்காட்டி மனு அளித்தனர். திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க நிறுவனர் சரவணன் அளித்த மனு: திருப்பூர் வடக்கு வாவிபாளையம், பூலுவப்பட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், வீடு உள்ளிட்ட கட்டுமானங்கள் கட்டுவதற்காக பலர் தற்காலிக மின் இணைப்பு பெற்றுள்ளனர். மின் இணைப்பு மீட்டரை, கட்டுமானம் கட்டி, அசையாத இடத்தில் வைக்கவேண்டும். ஆனால், எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல், மர கம்புகளில் மின் இணைப்பு மீட்டரை பொருத்திவைத்துள்ளனர். நெருப்பெரிச்சலில் மாநகராட்சி வரி வசூல் மையம் எதிரே, புதிய வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான தற்காலிக மின் இணைப்பு மீட்டர் பாக்ஸ், மர கம்பில் கட்டிவைக்கப்பட்டுள்ளது. கட்டட உரிமையாளர்கள் தங்கள் இஷ்டம்போல், மீட்டர் பெட்டிகளை இடமாற்றம் செய்கின்றனர். இதனால், மின் விபத்து ஏற்படும் அபாய நிலை தொடர்கிறது. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, தவறான முறையில் வழங்கப்பட்ட மின் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.