இரு மாநிலங்களை இணைக்கும் ரோட்டில் பாதிப்பு; ரோட்டோர பள்ளங்களால் நெரிசல் அதிகரிப்பு
உடுமலை, ; இரு மாநிலங்களை இணைக்கும் உடுமலை - மூணாறு ரோட்டில், இரு புறமும் மிகப்பெரிய பள்ளம் உள்ளதால், விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தை இணைக்கும் வகையில், உடுமலை - மூணாறு ரோடு அமைந்துள்ளது. 92 கி.மீ., துாரம் உள்ள இந்த ரோட்டில், சின்னாறு, மறையூர், காந்தலுார், தலையாறு என சுற்றுலா மையமாகவும், தேயிலைத்தோட்டங்கள், மக்கள் குடியிருப்புகள் பகுதியாகவும் உள்ளது.இந்த ரோட்டில் சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பஸ் போக்குவரத்து மற்றும் மூணாறு, மறையூர் பகுதி மக்கள் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு, இந்த ரோட்டையே பயன்படுத்தி வருகின்றனர்.இதில், உடுமலையிலிருந்து, 18 கி.மீ., துாரம் சின்னாறு வரை தமிழக பகுதியாகவும், மறையூர் வரை, 16 கி.மீ., துாரம், கேரளா மாநில பொதுப்பணித்துறை சார்பில், ரோடு பராமரிக்கப்பட்டு வருகிறது.உடுமலை ஒன்பதாறு செக்போஸ்ட் முதல், மறையூர் வரையிலான, 34 கி.மீ., துாரம் ரோடு, முழுமையாக மலைப்பகுதியில் அமைந்துள்ளது.இந்த ரோடு ஒரு வழித்தடமாக உள்ள நிலையில், ரோட்டின் இரு புறமும், 'புருவம்' பகுதிகள் மிகப்பெரிய குழியாக உள்ளது. அதிலும், தற்போது கேரளா பகுதியில் ரோடு புதுப்பிக்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய ஆழமாக ரோட்டின் இரு புறமும் மாறியுள்ளது.மழை காலங்களில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, தமிழக பகுதிகளில், ரோட்டின் இரு புறமும் பள்ளம் காணப்படுகிறது.ரோடு உயரமாகவும், ரோட்டின் பக்கவாட்டு பகுதிகள், இரு அடி ஆழம் வரை உள்ளதால், எந்த வாகனங்களும் இறங்க முடியாத நிலை உள்ளது.எதிரே வாகனங்கள் வந்தால், வழிவிட முடியாத நிலையும், ரோட்டிலிருந்து கீழே இறங்கினால், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.மணிக்கு நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், இந்த ரோட்டில் விபத்துக்களும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.எனவே, இரு மாநில அரசுகளும், ரோட்டின் இரு புறமும் உள்ள பகுதிகளில், கான்கிரீட் தளம் அமைக்கவும், மண் கொட்டவும் வேண்டும்.