ஆக்கிரமிப்பால் சுருங்கிப்போன ரோடுகள் போக்குவரத்தில் சிக்கல்
உடுமலை: உடுமலை நகரில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான ரோடுகளில், ஆக்கிரமிப்புகளால், ரோடுகள் அனைத்தும் குறுகலாக மாறி, போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் ராஜேந்திரா ரோடு, தளி ரோடு, கல்பனா ரோடு மற்றும் வ.உ.சி., வீதி ஆகிய ரோடுகளே, உடுமலை நகரின் பிரதான ரோடுகளாக உள்ளன. திருமூர்த்திமலை, அமராவதி, மூணாறு உட்பட சுற்றுலா தலங்கள் மற்றும் நகரிலுள்ள அரசு அலுவலகங்களுக்கு, இந்த ரோடுகளின் வழியாகவே அனைத்து வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், நகரின் அனைத்து ரோடுகளிலும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு அலுவலகங்கள் ஒருங்கிணைந்து ஒரே ரோட்டில் இருந்தாலும், தளி ரோடு நெரிசலுக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை. இதே போல், ரயில்வே ஸ்டேஷன், தினசரி சந்தை, உழவர் சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, அண்ணா பூங்கா அமைந்துள்ள ராஜேந்திரா ரோட்டிலும், காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து ஸ்தம்பிப்பது வழக்கமாகியுள்ளது. ரோட்டில் ஆக்கிரமிப்புகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தால், பெயரளவிற்கு மட்டுமே அகற்றப்படுவதால், எவ்வித தீர்வும் கிடைப்பதில்லை. பிற முக்கிய ரோடுகளான, கல்பனா ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, வ.உ.சி., வீதி போன்ற ரோடுகளிலும் நெரிசல் நிரந்தரமாக உள்ளது. நகரின் அனைத்து ரோடுகளும், அவல நிலையில் உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதாசாரிகளின் நிலை பரிதாபமாகியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நகராட்சி நிர்வாகம், போலீஸ், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. ஒருங்கிணைப்பு இல்லாததால், எந்த துறையும், நகர மக்களின் பிரச்னைகள் குறித்து கண்டுகொள்வதில்லை. நெரிசலை குறைத்து போக்குவரத்தை சீராக்க மாவட்ட நிர்வாகம், அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உடுமலை மக்களின் எதிர்பார்ப்பாகும். 'ரயில்வே கேட்'டில் சிக்கல் உடுமலை உழவர் சந்தை ரோட்டில் இருந்து பிரிந்து ராமசாமி நகர் வழியாக செல்லும் ரோட்டை, அரசு கலைக்கல்லுாரி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட அலுவலங்களுக்கு செல்லும் வாகன ஓட்டுநர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டில் உழவர் சந்தை தாண்டியதும், ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த கேட் பூட்டப்படும் போது, குறுகலான இடத்தில், வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அவ்விடத்தில் மேம்பாலம் அமைத்தல், ரோட்டை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது.