நீர்நிலை பாதுகாவலர் விருது வேர்கள் அமைப்பு பெறுகிறது
திருப்பூர்; தமிழக முதல்வரின், சிறந்த நீர்நிலை பாதுகாவலர் விருதுக்கு, திருப்பூர் வேர்கள் அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.திருப்பூரில் இயங்கி வரும் வேர்கள் அமைப்பு, பேரிடர் காலங்களிலும், கொரோனா தொற்றின் போதும், பல்வேறு சமுக சேவைகளை செய்து வந்தது. மண்ணரை மூளிக்குளத்தை துார்வாரியும், குளத்துக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலை பராமரித்தும் வருகிறது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் நிதியை பெற்று, குளம் மற்றும் வாய்க்கால் பராமரிப்பு பணி செய்துள்ளது. தமிழக அரசு சார்பில் வழங்கும், சிறந்த நீர்நிலை பாதுகாவலர் விருதுக்கு, திருப்பூர் வேர்கள் அமைப்பு தேர்வாகியுள்ளது.வேர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்தீப் கூறுகையில், ''சமூக சேவை நோக்குடன், மூளிக்குளம், நீர் வழங்கும் வாய்க்கால்களை பராமரித்து வருகிறோம். பல்வேறு அமைப்பினரும் உதவி செய்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழக அரசின் சிறந்த நீர்நிலை பாதுகாவலர் விருதை, நீர்நிலைகளை காத்து வரும் திருப்பூர் மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம். இன்று(5ம் தேதி), சென்னையில் நடைபெற உள்ள உலக சுற்றுச்சூழல் தினவிழாவில், விருது வழங்கப்பட உள்ளது,'' என்றார்.