கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை 30, 31ம் தேதிகளில் சிறப்பு முகாம்
திருப்பூர்: ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, ஒருகால பூஜை நடக்கும் கோவில்களுக்கு, அர்ச்சகர்களுக்கு, மாதம், 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.இதேபோல், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில் பூசாரிகளுக்கும், ஊக்கத்தொகை வழங்கப்படுமென, சட்டசபை கூட்டத்தொடரில், அமைச்சர் அறிவித்திருந்தார்.அதன்படி, ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத, கிராம கோவில் பூசாரிகளை தேர்வு செய்ய, ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பூசாரிகள் நலவாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு, மூன்று மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.சிறப்பு முகாம் நடத்தி, பதிவு சேர்க்கை முடிந்த பிறகு, அமைச்சர் அறிவித்தபடி, ஒருகால பூஜை திட்டத்தில், கோவில் அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு, 1,500 ரூபாய் வழங்கப்படுமென, கமிஷனர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.அவ்வகையில், திருப்பூர் மண்டலத்தில், அவிநாசி மற்றும் திருப்பூர் பகுதியில், வரும், 30 மற்றும் 31ம் தேதிகளில், சிறப்பு முகாம் நடத்த, இணை கமிஷனர் ரத்னவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில்களில், வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில், சிறப்பு முகாம் நடக்க உள்ளது.உதவித்தொகை பெற விரும்புவோர், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாத வருமானச்சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற கோவில் அமைவிட சான்று, எத்தனை ஆண்டுகள் பூசாரியாக பணியாற்றி வருகிறார் என்பதற்கான சான்று, கோவில் எத்தனை ஆண்டுகள் பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கிறது என்பதற்கான சான்று, பூசாரியின் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், வயது சான்று (60 வயதுக்கு கீழ்), பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகிய விவரங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.