சிவன்மலை உண்டியலில் ரூ.26 லட்சம் காணிக்கை
திருப்பூர் : சிவன்மலையில் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ராமண சுவாமி கோவில் உதவி கமிஷனர் இளையராஜா, சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் உதவி கமிஷனர் ரத்தினாம்பாள் ஆகியோர் முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில், 26 லட்சத்து, 4 ஆயிரத்து, 117 ரூபாய் ரொக்கம், தங்க நகை, 29 கிராம், வெள்ளி, 490 கிராம் மற்றும் மலேசியா நாட்டு பணங்களும் காணிக்கையாக இருந்தன. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், முருக பக்தர்கள் பங்கேற்றனர்.திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஐந்து உண்டியல்கள்; ஸ்ரீவீரராகவர் கோவிலில் மூன்று உண்டியல்கள் திறக்கப்பட்டன. அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்ஷினி, செயல் அலுவலர் வனராஜா ஆகியோர் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டன. ஸ்ரீவாரி குழுவினர், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அனைத்து நிகழ்ச்சிகளும், வீடியோ பதிவு செய்யப்பட்டன.செயல் அலுவலர் வனராஜா கூறுகையில்,''ஈஸ்வரன் கோவிலில், ஆறு லட்சத்து, 5 ஆயிரத்து, 777 ரூபாயும், பெருமாள் கோவிலில், 7 லட்சத்து, 3 ஆயிரத்து 979 ரூபாயும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவிலில், வங்கி ஊழியர்கள் முகாமிட்டிருந்ததால், ரொக்கம் உடனுக்குடன் 'டிபாசிட்' செய்யப்பட்டது,'' என்றார்.