உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.2.8 கோடி அபராதம்?  பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.2.8 கோடி அபராதம்?  பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

திருப்பூர்; ''திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சரிவர கையாளாத, திருப்பூர் மாநகராட்சிக்கு 2.80 கோடி ரூபாய் இடைக்கால அபராதமாக ஏன் விதிக்கக்கூடாது?'' என்று பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.திருப்பூர் மாநகராட்சியில், குப்பை கொட்டுவதற்கென பிரத்யேக இடமில்லாததால், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள பாறைக்குழியில், மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டிவந்தது.'இது, சட்ட விரோதம்; இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபட்டு வருகிறது' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலாளர் சதீஷ்குமார், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில், சமீபத்தில் பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு:தரம் பிரிக்கப்படாத குப்பையை பாறைக்குழியில் கொட்டுவதை மாநகராட்சி தவிர்க்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை விதியை உடனடியாக அமல்படுத்த வேண்டும். குப்பையை தரம் பிரித்து வாங்கவும், அதை உரிய முறையில் வகைப்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மறு சுழற்சி மற்றும் மறு பயன்பாட்டுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.பாறைக்குழியில் கொட்டப்பட்ட பல்வேறு வகை குப்பைகளை, உடனடியாக திரும்ப எடுக்க வேண்டும். உறுதியான மற்றும் அறிவியல் முறையில் திடக்கழிவுகளை கையாள்வது தொடர்பாக, குறுகிய மற்றும் நீண்ட கால திட்டத்தை, ஒரு மாத காலத்திற்குள் தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.அனைத்து துாய்மைப்பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும், அவர்கள் சரியான பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான சூழலில், பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.''சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியை பின்பற்றாதது; சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதற்காக, 2.80 கோடி ரூபாயை இடைக்கால அபராதமாக ஏன் விதிக்கக்கூடாது?' என்று அந்த உத்தரவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

வழக்கு தொடுத்தது ஏன்?

வழக்கு தொடர்ந்த சதீஷ்குமார் கூறியதாவது: மாநகராட்சியில், தினசரி, 800 டன் குப்பை சேகரமாகிறது. இதில், '200 முதல், 250 டன் குப்பையை தரம் பிரித்து முறையாக அகற்ற கட்டமைப்பு உள்ளது. 10 டன் குப்பையில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 200 டன் குப்பையில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்பட உள்ளது' என்று மாநகராட்சி நிர்வாகம் கூறினாலும், எஞ்சிய, 400 டன் குப்பையை என்ன செய்ய போகிறது; பாறைக்குழியில் தான் கொட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, முதலிபாளையம், வெள்ளியங்காடு, ராக்கியாபாளையம் என, பல இடங்களில் பாறைக்குழியில் குப்பை கொட்டப்பட்டிருக்கிறது; இது, சட்ட விரோதம். டாலர் சிட்டி என்ற பெருமையுடன், ஆண்டுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஆடை வர்த்தகம் நடக்கும் திருப்பூரில், திடக்கழிவு திட்டம் என்பது முறைகேடும், முரண்பாடும் உள்ளதாக தென்படுகிறது. இது சரிசெய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் தான் வழக்கு தொடுத்துள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை