சின்னாறு வனத்தில் துாய்மைப்பணி; விழிப்புணர்வால் குறையும் பிளாஸ்டிக்
உடுமலை : உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், சின்னாறு வனப்பகுதியில் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.உடுமலை அருகே, சின்னாறு வனப்பகுதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாதத்தையொட்டி சனிக்கிழமைதோறும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு செல்கின்றனர்.முதல் வார வழிபாடு முடிந்தவுடன், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், தன்னார்வல அமைப்புகளின் சார்பில், கோவில் சுற்றுப்பகுதிகளில் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி, செயலாளர் நாகராஜன், துணைத்தலைவர் சசிக்குமார், துணை செயலாளர் சதீஷ்குமார், உறுப்பினர்கள், தன்னார்வல அமைப்பினர், பொதுமக்கள் உட்பட 52 பேர் துாய்மைப்பணியில் ஈடுபட்டனர்.சுற்றுச்சூழல் சங்கத்தினர் கூறியதாவது:உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்களின் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கையால், இம்முறை பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு குறைந்துள்ளது.வழக்கமாக, 40 சாக்குப்பைகள் வரை கழிவுகள் சேகரிக்கப்படும். ஆனால் இம்முறை பத்துக்கும் குறைவான பைகள் அளவுக்குதான் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன. மேலும், கோவில் சுற்றுப்பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதும் தவிர்க்கப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறினர்.