மேலும் செய்திகள்
பத்திர பதிவு ஆபீஸ்களில் சர்வ(ம்)ர் பிரச்னை மயம்!
08-Oct-2025
உடுமலை; சார்பதிவாளர் அலுவலகங்களில், சர்வர் கோளாறு காரணமாக பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் பல மணி நேரம் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பத்திர பதிவுத்துறையில், நில உரிமை மாற்றம், கடன் அடமான பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். பதிவுத்துறையில் முன்னதாகவே ஆவணங்கள் பதிவேற்றம் செய்து, பதிவு துறையால் வழங்கப்படும் நேரத்தில் பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. உடுமலை, கணியூர், கோமங்கலம் உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில், கடந்த, 10 நாட்களாக சர்வர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. பதிவுத்துறை சர்வருக்குள் சென்றால், அடுத்தடுத்து பக்கங்களுக்குள் செல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. இணையதள பக்கம் திறந்தால், அதில் பதிவேற்றம் செய்ய முடிவதில்லை. இதனால், ஐந்து நிமிடத்தில் முடிய வேண்டிய பதிவுக்கு, அரை மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. சர்வர் பிரச்னையால் உரிய நேரத்தில் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இதுதவிர, பத்திரப்பதிவு ஆவணங்களை பதிவு நடந்த அன்றே ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பத்திரப்பதிவு கட்டணங்களை கருவூலத்தில் செலுத்த வேண்டும். பதிவுபணி முடிந்ததும், ஆவணங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை மேற்கொள்வது வழக்கம். கடந்த, ஒரு வாரமாக பதிவு பணிகள் மாலை, 6:00 மணிக்கு முடிந்தாலும், சர்வர் பிரச்னையால் இரவு, 9:00 மணி வரை அலுவலகத்தில் இருந்து பணிகளை முடித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பத்திரப்பதிவு, திருமண பதிவு என, பல்வேறு பதிவுகளுக்காக டோக்கன் முன்பதிவு செய்து, அலுவலகம் சென்றால், பதிவுகளை மேற்கொள்ள, பல மணி நேரமாகிறது. இதனால், ஒரு நாள் பொழுது முழுதும் அங்கு இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால், சென்னையில் சர்வர் பிரச்னை என்று ஒரு வார்த்தையில் முடித்து விடுகின்றனர். கடந்த, 10 நாட்களாக இதே நிலை தொடர்கிறது. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். அதிகாரிகள் கூறுகையில், 'பதிவு செய்வதற்கான சர்வர் கடந்த சில நாட்களாக பிரச்னையாக உள்ளது. மாலை நேரத்தில் சரியாகி விடுகிறது. இப்பிரச்னை தமிழகம் முழுவதும் உள்ளது. இதனை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்,' என்றனர்.
08-Oct-2025