ஆறாவது முறை உறைந்த ரத்தம்; மறுபிறவி எடுத்து வந்த நிஜம்
கடந்த 1979ல் துவங்கி 98 வரை ராணுவத்தில் பணிபுரிந்தேன். செகந்திராபாத்தில் உள்ள ராணுவக்கல்லுாரியில் வாகனத் தொழில்நுட்பப்பிரிவில் பயின்று, பொறியாளரானேன். நேரடியாக களத்தில் போர்புரிவோருக்கு, முகாமுக்கான பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், தளவாடப்பொருட்கள் உள்ளிட்டவற்றை நாங்கள்தான் கொண்டுசெல்ல வேண்டும்; வாகனத்தில் கோளாறு ஏற்பட்டால் நாங்கள் தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.சீனா - பாக்., எல்லையில் கடும் குளிரில் அதாவது மைனஸ் டிகிரி வெப்பநிலையில் பணிபுரிவோம். ரஷ்யாவில் இதற்கென தயாரான பிரத்யேக ஆடை எங்களுக்கு தருவிக்கப்பட்டிருந்தது. அதை அணிந்தால்தான் ஓரளவு தாங்கி நிற்க முடியும். முகத்தை 'ேஷவ்' செய்ய இயலாது.துர்முக் என்ற பகுதியில் எல்லைப் பாதுகாப்பு பணிபுரிபவர்கள், ரத்த உறைதலுக்கு ஆளாவர். சிறுநீர் கூட உறைந்துவிடும். ஆறு முறைக்கு மேல் ரத்தம் உறைதலுக்கு உள்ளாகி விட்டால், அதற்கு மேல் உயிர் வாழ்வது சிரமம்.பனிக்கட்டியில் நாங்கள் சென்ற வாகனம் சிக்கிவிட்டது. இதில் எனக்கு ஆறாவது முறையாக ரத்தம் உறைந்துவிட்டது.டில்லி அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். எனக்கு அது மறுபிறவி.ஒருவர் இறந்துவிட்டால், அந்த உடலை அகற்றக்கூட முடியாது. ெஹலிகாப்டர் வரும் வரை காத்திருக்க வேண்டும். தொப்பியை எடுத்து முகத்தை மூடிவிடுவோம். அருகிலேயேதான் படுத்திருப்போம். வாகனங்களில் ரேடியேட்டர் தண்ணீர் உறைந்துவிடும். தண்ணீரை சூடு செய்து ஊற்றுவோம்.வாகனங்களில் தொழில்நுட்பக் கோளாறு நேராமல் பார்க்க வேண்டும்; ராடைக் கையில் பிடித்து வேலை செய்வதே கடினமானதாக இருக்கும்.எதிரி ஒருபுறம் என்றால்; காலச் சூழ்நிலைகளும் பெரிய எதிரிகளாக விளங்கும்.தற்போது 'அக்னிபாத்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இளம் வயதிலேயே மாணவர்கள் ஒழுக்கத்துடன் வாழ்வதற்கும், நல்ல மனிதராக எதிர்காலத்தில் விளங்கச் செய்வதற்கும் இது வழிவகுக்கும்.தற்போது, திருப்பூர், பாரதி நகரில் வசிக்கிறோம். ராணுவப்பணி தேசத்திற்கு ஆற்றக்கிடைத்த அரும்பணி என்பதை ஒவ்வொரு நாளும் உணர்கிறேன்.