கொப்பரை உற்பத்தியில் நிலவும் மந்தநிலை
உடுமலை; உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இப்பகுதியில், தேங்காயை கொப்பரையாக மதிப்பு கூட்டி விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, கொப்பரை உற்பத்திக்காக, நுாற்றுக்கணக்கான உலர் களங்கள் இப்பகுதியில், அமைக்கப்பட்டுள்ளன. சில மாதங்களாக கொப்பரை விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.இதனால், தேங்காய் மற்றும் கொப்பரை வர்த்தகம் தீவிரமடையும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை பரவலாக தொடர்வதால், உலர் களங்களில், கொப்பரை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பகலிலும், வெயிலின் தாக்கம் இல்லாமல், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், கொப்பரை உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் மந்தநிலை தொடர்கிறது. தேங்காய் கொள்முதலும் தீவிரமடையவில்லை.