விரைவில் தீர்வு: மேயர்
திருப்பூர் மேயர் தினேஷ்குமார் கூறியதாவது: மாநகரின் குப்பை பிரச்னைக்கு தற்போது தீர்வு கண்டுள்ளோம். அமைச்சர் நேருவை, கோவையில் சந்தித்து, 'பயோ சி.என்.ஜி.,' திட்டத்துக்கு பூமி பூஜை போடப்பட்டுள்ளது. குப்பை தொடர்பாக மாற்றம் மக்கள் மத்தியில் இருந்து முதலில் தொடர வேண்டும். நகரில் சேகரமாகி உள்ள குப்பைகளை இந்த வார இறுதிக்குள் வெளியேற்றிவிடுவோம். மக்கள் அச்சப்பட வேண்டாம். பொறுமையாக இருங்கள். நான் துாங்கி, 30 நாட்களாகி விட்டது. மூன்றாண்டுகள் உழைத்தும், குப்பை பிரச்னை எங்களுக்கு சவாலை ஏற்படுத்தி விட்டது. கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்க முடியாது. தற்போது, நாளொன்றுக்கு 780 டன் சேகரமாகிறது. பயோ சி.என்.ஜி., திட்டம் அரசிடம் கேட்டு பெறப்பட்டது. மாநகராட்சிக்கு குப்பை கொட்டுவதற்கு பிரத்யேகமான நிரந்தரமான இடமில்லை. உறுதியாக, மூன்று முதல், ஐந்து மாதத்துக்குள் நிரந்தரமான தீர்வு காணப்படும். திடக்கழிவு மேலாண்மை குறித்து தவறான கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர். நான் மேயராக பொறுப்பேற்ற பின், குப்பை எடை போட்டு வாங்கப்பட்டது. பயோ சி.என்.ஜி., திட்டத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அது தற்போதைக்கு வெளியே தெரிய வேண்டாம். தெரிந்தால், ஒரு போராட்டக்குழு வந்து விடும். மக்கள் சிலர் தவறான போக்கை கையாள்கின்றனர். மாநகராட்சி குப்பையை எதற்கு, புறநகரில் கொண்டு வருகிறீர்கள் என்று கேட்கின்றனர். 'செயல் ஒன்றே சிறந்த சொல்'. மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை, பனியன் வேஸ்ட், இறைச்சி கழிவுகள் போன்றவற்றை பிரித்து வாங்க தயாராகிவிட்டோம். இதில் தளர்வுக்கு இடம் இல்லை. விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை அமலாகும்.