ஹிந்து முன்னணி நிர்வாகி கொலை; இருவரைத் தேடி தனிப்படை தீவிரம்
திருப்பூர் : திருப்பூர், குமரானந்தபுரம், காமராஜர் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன், 30. ஹிந்து முன்னணி வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர்.கடந்த, 25ம் தேதி அதிகாலையில் வீட்டின் அருகே அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரிந்தது. கொலையாளிகளை பிடிக்க, ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.இதுதொடர்பாக, பாலமுருகனுடன் முன்விரோதம் கொண்டிருந்த சுமன், கொலையில் ஈடுபட்ட, இருவருக்கு டூவீலரை கொடுத்த தமிழரசன் ஆகியோரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர். இருப்பினும் கொலையில் ஈடுபட்ட நரசிம்ம பிரவீன், 31, அஸ்வின், 29 ஆகியோர் சிக்காமல் தலைமறைவாக உள்ளனர்.போலீசார் கூறியதாவது:கொலையில் ஈடுபட்ட, முக்கிய குற்றவாளிகள் இருவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். தகவல் கிடைத்து தனிப்படை செல்லும் முன், வேறு இடத்துக்கு சென்று விடுகின்றனர். வால்பாறை, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, மதுரை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படையினர் உள்ளனர்.அவர்கள், இங்குள்ள நண்பர்கள், குடும்பத்துக்கு தொடர்பு கொள்கின்றனரா என்று கண்காணிக்கப்படுகிறது. திருப்பூரிலுள்ள அவர்களின் நண்பர்கள், ஏதாவது உதவி செய்கிறார்களா என்ற சந்தேகமும் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.