மீண்டும் புள்ளி மான் விசிட்; நாய்களால் அச்சுறுத்தல்
பல்லடம்; பல்லடம் அருகே, மீண்டும் புள்ளிமான் ஒன்று 'விசிட்' அடித்த நிலையில், வனத்துறையினரிடம் சிக்காமல் தப்பி ஓடியது.அவிநாசி அருகே கோதபாளையம் வனப்பகுதியில், ஏராளமான மான்கள் வசிக்கின்றன. அங்கிருந்து, உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்லும் மான்கள், வழி தெரியாமல் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விடுகின்றன. இவ்வாறு, பல்லடம் வட்டாரப் பகுதிகளில், அடிக்கடி மான்கள் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. சில தினங்கள் முன், வடுகபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வந்த, 10 வயதே ஆன புள்ளிமான் ஒன்று, நாய்கள் துரத்தியதால் அச்சமடைந்து, குடியிருப்பு ஒன்றுக்குள் நுழைந்தது. வனத்துறையினர் மானை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.இதேபோல், நேற்று, பல்லடம் -- தாராபுரம் ரோடு, ஆலுாத்துப்பாளையம் பிரிவு அருகே உள்ள காட்டுப் பகுதியில், 4 வயதான புள்ளி மான் ஒன்று, மரத்தடியில் ஹாயாக படுத்திருந்தது. இவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மானை வியப்புடன் பார்த்ததாலும், நாய்கள் விரட்டியதன் காரணமாகவும், மான் அங்கிருந்து தப்பி, அருகிலுள்ள வனப்பகுதிக்குள் நுழைந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த வனத்துறையினர், மானை பிடிக்க முயன்றனர். இதற்குள், மான், அதிவேகமாக காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இருப்பினும், நாய்கள் மானை விரட்டியபடியே சென்றன. மானின் இதயத்துடிப்பு பலவீனமானது என்பதால், விரட்டி பிடிக்க முயன்றால், மான் இறந்துவிடும் என்று கூறி, வனத்துறையினர் அதை பிடிக்கும் முயற்சியை கைவிட்டுசென்றனர். ருசி பார்க்க முயற்சி!
மான் இருப்பதை அறிந்த சமூகவிரோதிகள் சிலர், மானை வேட்டையாடி ருசி பார்க்க திட்டமிட்டனர். வனத்துறையினர் வந்ததை தொடர்ந்து, அங்கிருந்து ஓடினர். வழி தெரியாமல் தஞ்சமடைந்த மான், சமூக விரோதிகளின் கைகளில் சிக்காமலும், நாய்களின் பிடியில் சிக்கி உயிரை இழக்காமலும் இருக்க வேண்டும் என்பதால், வனத்துறையினர், மானை கண்காணித்து, பிடித்து, வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.