இழுபறியில் ஓடை மேம்பாட்டு பணி; மழைக்கு முன் நடவடிக்கை தேவை
உடுமலை; தங்கம்மாள் ஓடை பகுதியில், நடைபாதை அமைத்தல் மற்றும் தடுப்புச்சுவர் கட்டும் பணி பல ஆண்டுகளாக இழுபறியாக உள்ளதால், அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.உடுமலை நகரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள தங்கம்மாள் ஓடை, பருவமழை காலங்களில், ஏழு குளங்களில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் முக்கிய நீராதாரமாக உள்ளது.ஓடையின் இருபுறங்களிலும், அதிகளவு குடியிருப்புகளும் உள்ளன. நகர வளர்ச்சிக்கு முன் முக்கிய நீராதாரமாக இருந்த ஓடையை மீட்டு, பராமரிக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.குறிப்பாக, பருவமழை காலங்களில், ஓடையில் வெளியேறும் தண்ணீர் அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் செல்லாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை இருந்தது. இதையடுத்து, நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு திட்ட நிதியின் கீழ், தங்கம்மாள் ஓடையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.கடந்த, 2021ல், திட்ட பணிகளுக்கு, 12.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில், ஓடையை துார்வாரி, நடை பாதை மற்றும் தடுப்பு சுவர் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர். பணிகள் துவங்கி பல ஆண்டுகளாகியும், தற்போது வரை நிறைவு பெறாமல் உள்ளது.ஓடை முழுமையாக துார்வாரப்படாத நிலையில், மழைக்காலங்களில் வெள்ள நீர் செல்ல வழியில்லாமல், குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. தடுப்பு சுவர் கட்டும் பணி இழுபறியாக நடப்பதால், மழைக்காலங்களில் மக்கள் அச்சப்படுகின்றனர். நடைபாதை திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.தென்மேற்கு பருவமழை காலத்தில், இந்த ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகத்தினர், நிலுவையிலுள்ள மேம்பாட்டு பணிகளை நிறைவு செய்து, ஓடையை முழுமையாக துார்வார வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.