கோடை கால கலைப்பயிற்சி முகாம் பெற்றோர் எதிர்பார்ப்பு
உடுமலை; தனித்திறன்களில் சிறப்பாக செயல்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, நடப்பாண்டிலும் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடத்த எதிர்பார்க்கப்படுகிறது.பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு விடுமுறையை பயன்படுத்தும் வகையில், கோடைகால சிறப்பு பயிற்சி முகாம், கடந்த 2023-24 கல்வியாண்டில் நடந்தது. முகாமில் பங்கேற்க, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 நிறைவு செய்த மாணவர்கள், கல்வி, இலக்கியம், அறிவியல், கலை, தலைமைத்துவம், வினாடிவினா உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்படுவோர் தேர்ந்தெடுப்பட்டனர்.மாநில அளவில், ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்று, அவர்களுக்கு பல்வேறு கலைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு கதைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த சிறப்பு முகாமினால், மாணவர்கள் மற்றும் பெற்றோரும் உற்சாகமடைந்தனர். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள முகாமாகவும் இருந்தது. அதேபோல், நடப்பாண்டிலும், மாவட்ட அளவில் இத்தகைய சிறப்பு முகாம் நடத்துவதற்கு, கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டுமென அரசு பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக்குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.பள்ளி மேலாண்மைக்குழுவினர் கூறுகையில், 'தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கான இணை செயல்பாடுகள், கலைத்துறை போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. அவற்றை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு முகாம், விடுமுறையில் நடத்துவதற்கு கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றனர்.