இன்று முதல் கோடை விடுமுறை
திருப்பூர்; அனைத்து வகுப்புகளுக்கும் நேற்றுடன் தேர்வுகள் நிறைவு பெற்றுள்ளது. இன்று முதல் ஜூன், 1ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ல் துவங்கி, 25ம் தேதி வரை நடந்தது. பிளஸ் 1 தேர்வு மார்ச், 5ம் தேதி துவங்கி, 27ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச், 28ல் துவங்கி, கடந்த, 15ம் தேதியுடன் நிறைவடைந்தது.கல்வியாண்டில் இதுவரை இல்லாத வகையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் முன்பே, வெயில் காரணமாக துவக்கப்பள்ளி இறுதியாண்டு தேர்வுகள், கடந்த, 11ம் தேதி துவங்கப் பட்டது.ஒன்று முதல் மூன்றாம் வகுப்புக்கு, 17ம் தேதியுடன் தேர்வு நிறைவு பெற்று, விடுமுறை விடப்பட்டது. கடந்த, 16ல் துவங்கி நடந்து வந்த ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புக்கான தேர்வுகள், நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்றுடன் அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளும் முடிந்துள்ளது. இன்று (25ம் தேதி) முதல் ஜூன், 1ம் தேதி வரை, 38 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.விடுமுறை முடிந்து ஜூன், 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். மாணவர்களுக்கு விடுமுறை விட்டாலும், வரும், 30ம் தேதி வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும். விடைத்தாள் மதிப்பீடு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை முடிக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.