கழிவு நீர் குளமாக மாறிய சுண்டக்காபாளையம் ஓடை
உடுமலை; போடிபட்டி, சுண்டக்காபாளையம் ஓடையில், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி, குப்பைத்தொட்டியாக பயன்படுத்துகின்றனர்.போடிபட்டி ஊராட்சி சுண்டக்காபாளையம் கிராமத்தில், மழைநீர் வடிந்து செல்வதற்கான ஓடை உள்ளது. இந்த ஓடை முறையான பராமரிப்பு இல்லாமலும், புதர்ச்செடிகள் வளர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இதனால் தற்போது ஓடை குப்பைக்கழிவுகள் கொட்டும் இடமாக மாறிவிட்டது. ஓடை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ளதால், தண்ணீர் வடிந்து செல்வதற்கும் வழியில்லாமல் தேங்கியுள்ளது.ஓடையின் அருகில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கழிவுநீர் தேங்கும் பகுதியாக மாறியுள்ள ஓடையால், அப்பகுதியின் சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. மழை காலத்தில், இப்பிரச்னை பெரிதாகிறது.ஓடை துார்வாரப்படாமல் இருப்பதால், கழிவுநீர் குளமாக மாறிவிட்டது. ஓடையை முறையாக துார்வாருவதற்கும், குப்பைக்கழிவுகள் கொட்டாமல் இருப்பதற்கும், ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.