உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சந்திரகிரஹணத்தை முன்னிட்டு கோவில் நடை அடைப்பு

சந்திரகிரஹணத்தை முன்னிட்டு கோவில் நடை அடைப்பு

திருப்பூர்; சந்திரகிரஹணம் காரணமாக, நாளை மதியம் நடைசாத்தப்படுமென, பல்வேறு கோவில்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும், அமாவாசை, பவுர்ணமி நாட்களில், கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. குறிப்பாக, பவுர்ணமி பூஜைகள், மாலை துவங்கி இரவு, 9:00 மணி வரை நடப்பது வழக்கம். நாளை பவுர்ணமியின் போது, சந்திரகிரஹணம் ஏற்படுகிறது. நாளை பவுர்ணமி என்பதால், இரவு, 9:57 மணிக்கு துவங்கி, அதிகாலை, 1:26 மணி வரை கிரஹணம் ஏற்படுகிறது. முழு சந்திரகிரஹணம் என்பதால், பவுர்ணமி நாளில், இரவு இருள்சூழ்ந்து காணப்படும். இதன் காரணமாக, நாளை, உச்சிகால பூஜைகள் நிறைவு பெற்றதும் கோவில் நடை அடைக்கப்படும்; மாலை மற்றும் இரவுநேர பூஜைகள் இருக்காது. மாலை பவுர்ணமி பூஜை நடத்த வேண்டிய கோவில்களில், மதியத்துக்கு முன்னதாகவே நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும், 8ம் தேதி காலை நடைதிறந்து, வழக்கமான பூஜைகள் துவங்குமென, சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர். சிவாலயங்களில், தினமும் இரவு 8:30 மணிக்கு நடக்கும், அர்த்தசாம பூஜையை, நாளை மதியமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.  இதேபோல், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாளை மதியம், 2:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மீண்டும், 8ம் தேதி காலை, சுத்த புண்யாகவாசனை செய்து, கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பூஜைகள் நடக்குமென, கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மாவட்டத்திலுள்ள அனைத்து கோவில்களிலும், இதே நடைமுறை பின்பற்றப்படுவதாக, ஹிந்து அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !