உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரும் 17ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தம்; ஜவுளி தொழில் முனைவோர் திட்டவட்டம்

வரும் 17ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தம்; ஜவுளி தொழில் முனைவோர் திட்டவட்டம்

பல்லடம்; ரெயான் துணி விலை வீழ்ச்சியால், வரும், 17ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என, பல்லடத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஜவுளி தொழில் முனைவோர் தீர்மானித்துள்ளனர். தமிழ்நாடு ஜவுளி தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டம், பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. ரெயான் துணி விலை வீழ்ச்சி காரணமாக, உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு ஜவுளி தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் கூறியதாவது: திருப்பூர், கோவை மாவட்டங்களில், தினமும் ஒரு கோடி மீட்டர் ரெயான் துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த ஒரு மாத காலமாக, விலை வீழ்ச்சி ஏற்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். மீட்டருக்கு, 3 ரூபாய்க்கு மேல் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. பொருளாதார மந்த நிலை மற்றும் நுகர்வு குறைவு ஆகியவற்றால், விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுதவிர, தீபாவளி பண்டிகைக்கு தேவையான நுகர்வு ஏற்கனவே முடிந்ததால், இனி விலை உயர வாய்ப்பு இல்லை என்பதால், உற்பத்தியை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே, வரும், 17ம் தேதி முதல் நவ. 3ம் தேதி வரை ஜவுளி உற்பத்தியை நிறுத்துவது என தீர்மானித்துள்ளோம். மேலும், நவ. 3ம் தேதிக்குப் பின் கட்டுப்படியாகும் விலையை நிர்ணயம்செய்துவிட்டு, அந்த விலை கிடைத்தால் மட்டுமே விற்பனை செய்வது எனவும் தீர்மானித்துள்ளோம். ஆலோசனைக்கு பின், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !