உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பழமையான அன்னகத்து பால கால்வாயை... புதுப்பிக்கணும்!பொதுப்பணித்துறைக்கு தொடர் கோரிக்கை

பழமையான அன்னகத்து பால கால்வாயை... புதுப்பிக்கணும்!பொதுப்பணித்துறைக்கு தொடர் கோரிக்கை

உடுமலை: உடுமலை அருகே பழமையான நீர்ப்பாசன முறைக்கு உதாரணமாக, இன்று பயன்பாட்டிலுள்ள கல்லாபுரம் அன்னகத்து பால கால்வாயை முழுமையாக புதுப்பித்து, நெல் சாகுபடி செழிக்க செய்ய வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். உடுமலை அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் பல்வேறு சிற்றாறுகள் ஒருங்கிணைந்து, அமராவதி ஆறாக சமவெளியில் பயணித்து, கரூர் திருமுக்கூடலுார் பகுதியில், இந்த ஆறு காவிரி ஆற்றில் கலக்கிறது. ஆற்றின் குறுக்கே, 1957ம் ஆண்டு அமராவதி அணை கட்டப்பட்டது. ஆனால், பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே, ஆற்றை மறித்து, தடுப்பணைகள் அமைத்து, வாய்க்கால்கள் வழியாக நீரை திருப்பி, பாசனத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இன்றும், அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியில், ராஜவாய்க்கால்கள், வலது கரை கால்வாய்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில், கல்லாபுரம் பகுதியில், மேடான பகுதிக்கு நீர் கொண்டு வர, முற்றிலும் கற்கள் மற்றும் சுண்ணாம்பு கொண்டு, சுமார், 400 ஆண்டுகளுக்கு முன், 'அன்னகத்து பாலம்' எனப்படும் தொட்டிப்பாலம் அமைக்கப்பட்டு, இன்றளவும் நெல் சாகுபடி மூன்று போகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பகுதி மக்கள், இந்த கட்டமைப்பை கல்லணை எனவும் அழைத்து வருகின்றனர். தொடர் பயன்பாடு மற்றும் போதிய பராமரிப்பு இல்லாததால், அன்னகத்து பாலம் கால்வாயில், நீர் விரயம் அதிகரித்துள்ளது. மேற்குபகுதி கால்வாயை தாங்கும் துாண்களில் விரிசல் விட்டுள்ளது; பல இடங்களில், தண்ணீர் விரயமாகி, விளைநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை காணப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்கது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறியதாவது: அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கல்லணை எனப்படும், அன்னகத்துபாலம் கால்வாய் வரலாற்று சிறப்புமிக்கது. மேலும், கீழும் ஒட்டாமல், நாக்கு போல் உள்ளதால், அன்னகம் என குறிப்பிடப்படுகிறது. கல்லாபுரத்தின் வடக்கு பகுதியில் மேடாக உள்ள பகுதிக்கு, நீர் கொண்டு செல்ல, நில மட்டத்திலிருந்து ஆறு அடி உயரத்தில், முற்றிலும், கற்கள், தட்டையான கல் தளம், சுண்ணாம்பு கொண்டு இணைப்பு என, 1.5 கி.மீ., நீளத்திற்கு, ஒரே உயரத்தில் இந்த கால்வாய் அமைந்துள்ளது. இதன் வாயிலாக, இன்றளவும், 450 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. 400 ஆண்டுக்கு முன், இப்பகுதி மக்கள் மின் வசதி இல்லாத போது, இயற்கையான நீருந்து அமைப்பில் இந்த கால்வாய் கட்டப்பட்டுள்ளதும், பழங்காலத்தில், நீர் மேலாண்மையில், சிறந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதற்கு சான்றாக இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர். பழமையான நீர்ப்பாசன முறைக்கு உதாரணமாக உள்ள இந்த பாலத்தை பொதுப்பணித்துறையினர் பழமை மாறாமல், முழுமையாக புதுப்பிக்க வேண்டும். இதனால், ஆயக்கட்டு நிலங்களில் நெல் சாகுபடி செழிப்பதுடன் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பயன்படும். இது குறித்து நடவடிக்கை எடுக்க, அப்பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக அரசுக்கு மனு அனுப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை