மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக செயல்பாடு ஏற்றம் பெறும்! இனி கண்டிப்பாக ஏற்றம் பெறுமென நம்பிக்கை
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக செயல்பாடுகளில் நல்ல மாற்றங்கள் நிகழும் என, புதிய அலுவலர் உறுதி அளிக்கிறார்.திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக செயல்பாடுகள், படு மந்தமாகிவிட்டது. அரசு ஒதுக்கீடு செய்த, சக்கர நாற்காலி, பேட்டரி வீல் சேர் ஆகியவற்றை பயனாளிகளுக்கு சரிவர வழங்காமல், மாதக்கணக்கில், கலெக்டர் அலுவலக மாடிப்படிக்கு கீழ், போட்டு வைத்துள்ளனர். உபகரணங்கள் வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வுக்கான நேர்காணல்களையும் சரிவர நடத்துவதில்லை.கடந்த மூன்று ஆண்டாக, சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, அடையாள அட்டைக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.காலையிலேயே மருத்துவ பரிசோதனை முடிக்கப்பட்டாலும்கூட, மாற்றுத்திறனாளிகளை, மாலை, 6:00 மணி வரை காத்திருக்கச் செய்துதான், அடையாள அட்டை வழங்கப்படும்.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், முகாம் நாளில் வெளியூர் சென்றாலோ அல்லது விடுப்பில் சென்றாலும், தகவல் தெரிவிப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, இலவச ஸ்கூட்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.இது தொடர்பாக, தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, சென்னையிலிருந்து வந்த அதிகாரிகள் குழு, இரண்டு நாட்கள் திருப்பூரில் முகாமிட்டு, தணிக்கை செய்தது.தணிக்கை குழுவினர் அளித்த அறிக்கை அடிப்படையில், முதல்கட்டமாக, திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக பணிபுரிந்த வசந்தராமகுமார், ராணிப்பேட்டைக்கு மாற்றப்பட்டார். ராணிப்பேட்டையில் பணிபுரிந்த சவரணகுமார், திருப்பூ ருக்கு நியமிக்கப்பட்டார்.திருப்பூரில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சரவணகுமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகளை, மாற்றிக்காட்டுவேன் என, உறுதி அளித்துள்ளார். தடையற்ற சேவைபுதிய அதிகாரி உறுதி
இதுகுறித்து அவர் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:கடந்த காலங்களில் திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செயல்பாடுகள்; தேவைப்படும் மாற்றங்கள் குறித்து, கடந்த 17ம் தேதி வெளியான 'தினமலர்' நாளிதழ் செய்தியை படித்து தெரிந்து கொண்டேன்.மருத்துவ முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, மருத்துவ பரிசோதனை முடிந்ததும், உடனுக்குடன் அடையாள அட்டை வழங்கி, காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைக்கப்படும்.தேங்கியுள்ள சக்கர நாற்காலி, பேட்டரி வீல் சேர் உள்பட அனைத்து உபகரணங்களும், உரிய பயனாளிகளுக்கு விரைந்து வழங்கப்படும். திங்கள் கிழமைதோறும், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும்போது, கலெக்டர் தலைமையில் நிகழ்ச்சி நடத்தி, தேக்கம் ஏற்படாதவகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உபகரணங்கள் வழங்கப்படும்.முகாம் நாட்களில், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முதல் கூட்ட அரங்கம் வரை, பேட்டரி வாகனம் தடையின்றி இயங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காணும்வகையில், கலெக்டர் தலைமையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும். ஆன்லைன் பதிவு மூப்பு அடிப்படையிலேயே, மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்பட்டு, இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டருக்கு நேர்காணல் நடத்தப்படும்.ஒதுக்கீடு செய்யப்படும் ஸ்கூட்டர்கள், பயனாளிகளுக்கு உரிய காலத்தில் சென்றடைவது உறுதி செய்யப்படும். மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை நாடிவரும் மாற்றுத்திறனாளிகள், மரியாதையுடன் நடத்தப்படுவர். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும், தங்குதடையின்றி கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.