எகிறும் ரசிகர்களின் இதயத்துடிப்பு
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் தலா ஒரு டெஸ்டில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளதால், பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் (26ம் தேதி) துவங்கும் 'பாக்ஸிங் டே' டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை பெறும் என்பதால், ரசிகர்களின் இதயத்துடிப்பு அதிகரித்துள்ளது. ஆஸி.,யை வீழ்த்த யோசனை
குமார், உடற்கல்வி இயக்குனர், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி: கடந்த, 2020 மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதில் சுப்மன்கில், ரிஷப் பண்ட், பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தற்போதைய டெஸ்ட் தொடரில் ராகுல் முதலிரண்டு டெஸ்டிலும் சிறப்பாக பேட்டிங் செய்தார். மற்றொரு போட்டியில் ஜெய்ஸ்வால்,கோலி சிறப்பாக ஆடினர். மெல்போர்ன் டெஸ்டில், துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் - ராகுல் சிறப்பான துவக்கத்தை தர வேண்டும்; இருவரில் ஒருவர் சதம் கடந்து அடித்தளம் அமைத்தால் தான், கடைசி நாட்களில் வெற்றி வசமாகும்.பின்னர் வரும் பேட்ஸ்மேன்களில் கோலி, சுப்மன் கில், ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், நிதிஷ், ஜடேஜா ஆகியோரில், எவரேனும் இருவர் சிறப்பான ஆட்டத்தை ஆடினாலே இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 400 ரன்களுக்கு மேல் அடிக்க வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்சம், 350 ரன்களை கடந்தால் தான், நம் அணியின் பந்து வீச்சும் சிறப்பாக இருக்கும். ஆஸி., அணியை முதலில் இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு கீழே அனைத்து விக்கெட்டுகளையும் எடுக்க வேண்டும். இப்படி செய்தால் கண்டிப்பாக இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. வரலாறு தொடர வேண்டும்
நரேஷ்குமார், உடற்கல்வி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, தளவாய்ப்பட்டணம், தாராபுரம்: ஆஸி., அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக கடந்த டெஸ்ட் போட்டிகளில் திகழ்ந்துள்ளது. எனவே, மார்னஸ் லபுேஷன், டேவிஸ் ெஹட் ஆகியோரை விரைவாக ஆட்டமிழக்க செய்தால் தான் ஆஸி., அணியின் ரன் குவிப்பை தடுக்க முடியும். 'பாக்ஸிங் டே' டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி கடந்த 12 ஆண்டுகளாக ஒரு தோல்வியைகூட சந்தித்ததில்லை. அந்த வரலாறு தொடர வேண்டுமெனில் இந்திய அணி பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். துவக்க பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் - ராகுல் இருவரும் முதல் 25 ஓவர் நிலைத்து நின்று விக்கெட்டை கொடுக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அடுத்து வரக்கூடிய பேட்ஸ்மேன்கள் இம்முறை அதிக ரன் குவிக்க வேண்டும் என்று பொறுப்புணர்ந்து ஆடினால், முதல் இரு நாட்களில், வலுவான நிலையை அடைய முடியும். நிதிஷ் ரெட்டிக்கு பேட்ஸ்மேன் பட்டியலில் ஐந்தாவது இடம் வழங்க வேண்டும். பந்துவீச்சிலும் இந்திய அணி உரிய மாற்றங்கள் செய்து ஆதிக்கம் செலுத்தவேண்டும்.ஜெய்ஸ்வால் - ராகுல் சிறப்பான துவக்கத்தை தர வேண்டும்; இருவரில் ஒருவர் சதம் கடந்து அடித்தளம் அமைத்தால் தான், கடைசி நாட்களில் வெற்றி வசமாகும்.